மும்பை விமான நிலையம் இந்தியாவின் இரண்டாவது அதிகம் பேர் பயணிக்கும் சுறுசுறுப்பான விமான நிலையமாகும். கடந்த ஐந்தாண்டுகளில் விமானங்கள் வருகை, புறப்பாட்டில் அதிக நேரம் தாமதமாவதில் மும்பை விமான நிலையம் நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது.
விமான நிலையத்தின் இணையதளத்தில் உள்ள தகவல்களின்படி, கடந்த ஆண்டில் ஏறக்குறைய மூன்றில் ஒருபங்கு விமானங்கள் தாமதமாக வந்துள்ளன. குறிப்பாக, கடந்த ஐந்தாண்டுகளில் டிசம்பர் மாதம் மிகவும் மோசமான மாதம். ஏனெனில், 44 சதவிகித புறப்பாடு மற்றும் 47 சதவிகித வருகை விமானங்கள் தாமதமாக வந்துள்ளன. 65 விநாடிகளுக்கு ஒரு விமானம் என்ற வீதத்தில் விமானப் போக்குவரத்து நடைபெறுகிறது.
புறப்பாடு மற்றும் வருகையில் தாமதமாகும் வரிசையில் பனிமூட்டத்தால் அதிகளவு விமானச் சேவை ரத்தாகும் டெல்லி இரண்டாம் இடத்திலேயே உள்ளது. பிற நகரங்களில் இருந்து வரும் இணைப்பு சேவை விமானம் தாமதம், பணிக்குழு மாறுதல், அதிகளவு விமானப் போக்குவரத்து, விமானம் தரையிறங்க போதிய இட வசதியின்மை உள்ளிட்டவையே மும்பையில் விமானங்கள் தாமதமாகக் காரணம் எனக் கூறப்படுகிறது.
உண்மையில் இந்தாண்டு டெல்லி மிகவும் சிறப்பாகச் செயல்பட்டது. இரண்டு நாள்களாக மிக மோசமான பனிப்பொழிவு காரணத்தால் விமான கால அட்டவணை மிகவும் பாதித்தது. ஆனால் மும்பை விமான நிலையத்தின் பிரச்னைகள் பெரும்பாலும் நிலையத்துக்குள்ளே ஏற்படும் என பெயர் வெளியிட விரும்பாத மூத்த நிர்வாகி ஒருவர் கூறினார்.
2016-17 ஆண்டில் மும்பை விமான நிலையம் ஒரு நாளுக்கு 837 விமானங்கள் அல்லது சராசரியாக 65 விநாடிகளுக்கு ஒரு விமானம் என உலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையமாக மாறியது. லண்டனின் கேட்விக் விமான நிலையத்தில் நாளொன்றுக்கு 757 விமானங்கள் இயக்கப்படுகின்றன. அதைவிட அதிக விமானங்களை இயக்கிய மும்பை விமான நிலையம் தற்போது விமானங்கள் தாமதமாவதில் முதலிடத்தில் உள்ளது.