எம்.ஜி.ஆரின் 101ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அனிமேஷன் தொழில்நுட்பத்தில் எம்.ஜி.ஆரைக் கதாநாயகனாகக்கொண்டு உருவாகும் ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு’ படத்தின் பூஜை இன்று (ஜனவரி 17) நடைபெறுகிறது.
1973ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் தயாரித்து இயக்கிய படம் உலகம் சுற்றும் வாலிபன். இந்தப் படத்தை போல கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு என்ற படத்தை பிரமாண்டமாகத் தயாரித்து, அதில் நடிக்க திட்டமிட்டிருந்தார் எம்.ஜி.ஆர். ஆனால், அது கைகூடாமல் போனது. இப்போது எம்.ஜி.ஆரின் கனவுத் திரைப்படமான கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜுவை ஐசரி கணேஷ், அனிமேஷன் தொழில்நுட்பத்தில் தயாரிக்க உள்ளார்.
இந்தப் படத்தின் பூஜை இன்று மாலை சென்னை சத்யா ஸ்டுடியோவில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆருடன் நடித்த நடிகர், நடிகைகள், பணியாற்றிய தொழில் நுட்ப கலைஞர்கள் உட்பட ஏராளமான திரையுலகப் பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளனர். இந்தப் படத்தை கதை, திரைக்கதை எழுதி எம்.அருள்மூர்த்தி இயக்குகிறார். வைரமுத்து வரிகளில் டி.இமான் இசையமைக்கிறார். படத்தொகுப்பாளராக ஆன்டனி பணியாற்றுகிறார். நடனங்களை ராஜு சுந்தரமும் சண்டை காட்சிகளை ராக்கி ராஜேஷும் அமைக்கவுள்ளனர். வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே.கணேஷும், பிரபு தேவாவும் இணைந்து தயாரிக்கின்றனர். அடுத்த ஆண்டு (2019) ஜனவரி 17ஆம் தேதி எம்.ஜி.ஆர். பிறந்த நாள் அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.