சிறந்த படைப்பாற்றல் மிக்க வீதி ஓவிய கலைஞர்களின் திறமையைப் பாராட்டும் வகையில் இந்த வருடம் முதல் இத்துறைச்சார்ந்த கலைஞர்களுக்காக ஜனாதிபதி விருது வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
கொழும்பு வீதி ஓவியக் கலைஞர்கள் சங்கத்துடன் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இதேபோல், வீதி ஓவியக் கலைஞர்களின் நலனுக்காகவும் அவர்களின் எதிர்கால நடவடிக்கைகளுக்காகவும் அனைத்து ஆதரவுகளையும் வழங்குவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் தலைமையின் கீழ் தமது துறைக்கு தற்போது சரியான வரவேற்புக் கிடைத்திருப்பதாக அந்த ஓவியக் கலைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்போது தேசிய நல்லிணக்க செயற்பாட்டுடன் ஒன்றிணைந்து வடக்குக் கிழக்கை இணைக்கும் நல்லிணக்க வேலைத்திட்டத்திற்கு தமது படைப்பாற்றலை வெளிப்படுத்தும் வல்லமை குறித்தும் சுட்டிக்காட்டிய இவர்கள் சில கோரிக்கைகளையும் ஜனாதிபதியிடம் முன்வைத்தனர்.
சுற்றுலா கவர்ச்சிமிக்க பிரதேசங்களில் தமது படைப்புக்களை காட்சிப்படுத்துவதற்கு சந்தர்ப்பத்தை பெற்றுக்கொள்ளல், இலங்கை முதலீட்டுச் சபையின் கீழ் பதிவு செய்தல், இலங்கை கலைச்சபையை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு சந்தர்ப்பத்தைப் பெற்றுக் கொள்ளல், கலாசார மற்றும் சுற்றுலா அமைச்சுக்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்ளல், நகர அலங்கார செயற்பாடுகளில் ஈடுபடுதல் முதலான கோரிக்கைகளை முன்வைத்தனர்.
அதேபோல், நீண்டகாலம் இந்தத் துறையில் ஈடுபடுவோருக்கு கடன் வசதியை செய்து தருமாறும் இவர்கள் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டனர்.