தமிழர்களால் வருடாந்தம் சிறப்பாகக் கொண்டாடப்படும் தைப்பொங்கல் திருநாள் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை(14) இடம்பெறவுள்ள நிலையில் யாழ். மாவட்டத்தில் தைப்பொங்கல் வியாபாரம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளதாக யாழிலுள்ள எமது செய்தியாளர் தெரிவித்தார். யாழ். நகரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகள், யாழ்.குடாநாட்டின் முக்கிய பொதுச் சந்தையான திருநெல்வேலி பொதுச்சந்தை மற்றும் அதனை அண்டிய பகுதிகள், வலிகாமத்தின் பல்வேறு பகுதிகள், வடமராட்சி, தென்மராட்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தைப்பொங்கலுக்குத் தேவையான பானைகள், அரிசி, பயறு, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொருட்களைக் கொள்வனவு செய்வதில் இன்று (12) அதிகாலை முதல் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இன்று மதியத்துக்கு முன்னர் சுமாராக இடம்பெற்று வந்த பொங்கல் வியாபாரம் பிற்பகலுக்குப் பின்னர் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.