கருத்தடை சாதனம் பயன்படுத்தப்போகிறீர்களா?

குழந்தை பிறந்தவுடன், மீண்டும் கர்ப்பம் ஆவதைத் தடுப்பதற்காகப் பலரும் கருத்தடைச் சாதனங்கள், மாத்திரைகள் பயன்படுத்துகின்றனர். இது பாதுகாப்பானது என்பதால், இந்தக் கருத்தடை முறையைப் பின்பற்றுபவர்களின் எண்ணிக்கையும் இன்று அதிகரித்துள்ளது.
இது ஆரோக்கியமான விஷயம்தான் என்றாலும், கருத்தடைச் சாதனத்தைப் பொருத்திக்கொண்ட பிறகு, மருத்துவரை அணுகி, ஆலோசனை பெறுவது, பரிசோதித்துக்கொள்வது என்பதில் பெண்கள் பெரிய அளவில் அக்கறை காட்டுவது இல்லை. இதுவே, பல்வேறு பிரச்னைகளுக்கு வழிவகுத்துவிடும். 
“இன்றைய வாழ்க்கைச் சூழலில், வீட்டுக்கு ஒரு வாரிசு போதும்’ என்ற மனரீதியில்தான் பெரும்பாலான தம்பதிகள் இருக்கின்றனர். ஒரு குழந்தை பிறந்ததும், அடுத்த குழந்தை வேண்டாம் என்று விரும்புபவர்கள், ஒரு குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் இடைவெளி வேண்டும் என்று நினைப்பவர்கள் கருத்தடை வளையம் (Copper T) பொருத்திக்கொள்வது என்பது நடைமுறையில் உள்ள விஷயம்.
கருத்தடையில் தற்காலிகம், நிரந்தரம் என்று இரண்டு வகைகள் உள்ளன. கொப்பர் டி பொருத்துவது என்பது தற்காலிகமானது.
தற்காலிகம்
ஐ.யு.டி. கொப்பர் (அல்ட்ரா யுட்ரைன்) என்ற சாதனத்தை, கர்ப்பப்பைக்குள் பொருத்துவது தற்காலிக முறை. மருந்து இல்லாமல் இருப்பது லிப்பிஸ் லூப் (Lippes loop-). மருந்துடன் இருப்பது, கொப்பர் டி. இது 3, 5, 10 வருடங்கள் என்று மூன்று வகை உண்டு. இந்தச் சாதனத்தைப் பொருத்தும்போதே, வெளியில் எடுக்க வேண்டிய திகதி, மற்றும் வரக்கூடிய பிரச்சினைகள் பற்றியும் விரிவாகச் சொல்லிவிடுவோம். குறிப்பிட்ட அந்தத் திகதிக்கு ஒரு மாதத்துக்கு முன்பாகவோ, பின்பாகவோ கொப்பர் டியை வெளியே எடுத்துவிடலாம்.
கொப்பர் டி பொருத்திய பிறகு, மாதவிடாய் வரவில்லை என்றால், உடனே டாக்டரை வந்து பார்க்க வேண்டும். கொப்பர் டி பாதுகாப்பானது என்றாலும், இதில், சில தற்காலிகப் பக்கவிளைவுகளும் ஏற்படலாம். காப்பர் டி போட்டுக் கொண்டதும் சிலருக்கு, தலைவலி, முதுகுவலி, வாந்தி வருவது போன்ற உணர்வு இருக்கும். உடம்பு இதை ஏற்றுக்கொள்ளும் வரை இதுபோன்ற பிரச்சினைகள் இருக்கும்.
நிரந்தரம்
பெலோப்பியன் குழாயில் தடை ஏற்படுத்துவது, நிரந்தரமான கருத்தடை. தற்போது 
சிறு துளையிட்டு லேப்ராஸ்கோப்பி கருவியைப் பயன்படுத்திச் செய்யப்படுவதால், இந்த அறுவைசிகிச்சையை, மினி லேப்ராடமி (Mini Lapratomy) என்கிறோம்.
இந்த முறையில், இரு பெலோப்பியன் குழாய்களையும் கருப்பையுடன் இணையவிடாமல் துண்டித்து, சீல் செய்யப்படுகிறது. சிலருக்கு, துண்டிக்கப்பட்ட பலோப்பியன் குழாயின் முனைப் பகுதியில் பேண்ட் போடப்படும். சிலருக்கோ பலோப்பியன் குழாயை மடித்து, பேண்ட் போடுகிறோம். இதில் உள்ளே போடப்படும் பேண்ட் அறுபட வாய்ப்புகள் அதிகம்.
முன் எச்சரிக்கை
கர்ப்பப்பைக்குள் இருக்கும் கொப்பர் டி, வெளியில் நூல் போல் தெரிவதை, நம்மால் உணர முடியும். மாதம் ஒரு முறை, வெளியே நீட்டியிருக்கும் நூலை நாமே பரிசோதித்துக்கொள்ள வேண்டும். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை, டாக்டரிடம் வந்து பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.
கொப்பர் டி பொருத்தியவுடன் அதிக இரத்தப்போக்கு அல்லது ஒழுங்கற்ற மாதவிடாய் இருந்தால், உடனடியாக மருத்துவரைப் பார்ப்பது நல்லது. கொப்பர் டி போட்டதும் கர்ப்பம் தரித்துவிட்டால், அந்தக் கர்ப்பத்தைத் தொடரக் கூடாது. குழந்தை கருக்குழாயிலேயே தங்கிவிடலாம். எனவே, அதை எடுத்துவிடுவது நல்லது. இல்லையெனில், நோய்த் தொற்று வர வாய்ப்பு இருக்கிறது.
கொப்பர் ரி யில், காப்பர் (தாமிரம்) இருக்கும் வரைதான் நல்லது. அதில் கொப்பர் இல்லாமல் போகும்போது, முட்டை, கர்ப்பப்பையைத் துளைத்துக்கொண்டு உள்ளே போக வாய்ப்புகள் அதிகம். அதன் பிறகு அகற்றுவது மிகவும் கஷ்டம் கொப்பர் டி போடுவதற்கு முன்பும், பின்பும் தெரிந்துகொள்ள வேண்டியவை உள்ளன.
கொப்பர் டி போடப்போகிறீர்களா?
வயது, முதல் முறையா என்பது பற்றிய விவரங்கள் தெரிவிக்க வேண்டும்.
மாதவிலக்கு வந்த 10 நாட்களுக்குள் போட்டுவிட வேண்டும்.
குழந்தை இல்லாதவர்கள், போடவே கூடாது. இதனால், கர்ப்பப்பையில் ரணம் ஏற்பட்டு, குழந்தை நிரந்தரமாகத் தங்காமல் போய்விடும்.
இரத்தம் மற்றும் குளுக்கோஸ் கட்டுப்பாட்டில் உள்ளவர்கள் போட்டுக் கொள்ளலாம்.
கொப்பர் டி யை அகற்றுகிறீர்களா?
கொப்பர் டி பொருத்திகொண்டதிலிருந்து மருத்துவரிடம் உரிய நேரத்தில் பரிசோதனை செய்துகொள்ளாமல் போனால், நூல் சில சமயம் உள்ளேயே போய்ச் சுருண்டுகொண்டு, குடலில் போய் ஒட்டிக்கொள்ளலாம். இதை ஸ்கேன் மூலமே அறிய முடியும்.
கொப்பர் டி நகர்ந்து இருந்தாலும், கண்டிப்பாக ஸ்கேன் அல்லது எக்ஸ்ரே எடுத்துப் பார்க்க வேண்டும்.
கொப்பர் டி, கர்ப்பப்பைக்கு உள்ளே இருந்தால், மயக்க மருந்து கொடுத்துத்தான் எடுக்க வேண்டி இருக்கும்.
நோயாளிக்கு வலி தாங்க முடியாமல் அதிர்ச்சியில்கூட உயிர் பிரிய வாய்ப்பு இருக்கிறது. கர்ப்பப்பைக்குள் சீழ் உண்டாகி, நோய்த் தொற்று வரலாம். இதனால், அதிக வலி, இரத்தப்போக்கு, வெள்ளைபடுதல் இருக்கும். கெட்ட வாடை வீசும். மேலும், அகற்ற முடியாமல் போனால், அறுவைசிகிச்சைக் கூடத்துக்கு அழைத்துச்சென்று மயக்க மருந்து கொடுத்து, கர்ப்பப்பைக்குள் எண்டோஸ்கோபி மூலமாகப் பரிசோதிக்க வேண்டும்.
ஹிஸ்ட்ரோஸ்கோப் (Hysteroscope) முறையில் செர்விக்ஸ் வழியாக, கர்ப்பப்பையை அடைந்து, காப்பர் டியை அகற்ற வேண்டி இருக்கும்.
யாரெல்லாம் போடக்கூடாது?
ஒழுங்கற்ற மாதவிலக்கு, அதிக உதிரப்போக்கு இருந்தால், இது சரிவராது. இவற்றால் சில சமயம் லூப் தானாகவே கழன்றுவிட வாய்ப்பு உண்டு.
திருமணமாகாதவர்களுக்கும் நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் போடுவது இல்லை. கர்ப்பப்பையில் புண், கட்டிகள், கர்ப்பப்பையில் பிரச்சினை, வெள்ளைப்படுதல் மற்றும் முற்றிய சர்க்கரை நோயாளிகள், கொலஸ்ட்ரால், இதயப் பிரச்சினை உள்ளவர்கள் போட்டுக்கொள்வதும் நல்லதல்ல.