மூட்டு வலிகளுக்கு முடிவு காணமுடியுமா?

மூட்டுவலி என்பது பொதுவானது. இதில் பல வகைகள் உண்டு. 70 வீதமான மூட்டுவலி வயது வந்தோருக்கு ஏற்படுகிறது. 60 வயதுக்கு மேல் குருத்தெலும்பு (Cartilage) தேய்ந்து விடுகிறது. இதனால் வீக்கம், மூட்டுவலி, நடப்பதில் சிரமம் ஏற்படுகிறது. வயது வந்தோருக்கு குருத்தெலும்பு தேய்வதனையே ஒஸ்தியோ ஆத்ரைடிஸ் (osteoarthritis) என்கிறோம்.மூட்டுத் தேய்மானம் இரண்டு வகைப்படும்.

மூட்டழற்சி (Osteo arthritis);

இது பொதுவாக வயதானவர்களுக்கு வரும். இடுப்பு மூட்டு, கால் மூட்டு தோள்பட்டை, கழுத்து போன்ற பகுதிகளில் ஏற்படும்.
முழங்காலில் உள் இணைப்பிலும் எலும்புகளுக்கிடையிலும் ஒருவித சவ்வு இருக்கும். இதனையே கார்டிலெஜ் என்கிறோம். இந்த சவ்வுதான் முழங்கால் மூட்டு தேய்ந்து போகாமல் பாதுகாக்கிறது. முழங்கால் மூட்டும் எலும்பும் ஒன்றோடொன்று உராய்ந்து போகாமல் எளிதில் அசைவதற்கு சவ்வு அவசியம். இந்த சவ்வு தேய்ந்து போனால் தான் வலி ஏற்படுகிறது.
உடல் எடை கூடல், முறையற்ற உணவுப் பழக்கவழக்கம், நீண்டநாள் அடிபட்டு படுக்கையில் இருப்பவர்கள் மூட்டுகளை அசைப்பது குறைந்துபோவது ஆகியவற்றால் வலி ஏற்படும்.

முடக்குவாதம் (rheumatoid arthritis)

பெரும்பாலும் விரல்கள், மணிக்கட்டு, கால் போன்ற பகுதிகளையே தாக்கும். ஒவ்வொருவருக்கும் உடலில் குறிப்பிட்டளவு நோயெதிர்ப்புச் சக்தி செல்கள் இருக்கும். இந்த செல்களில் பாதிப்பு ஏற்படும்போது முழங்கால், கால்களின் இணைப்புகளில் வீக்கமும் அழற்சியும் உண்டாகும். இதனையே முடக்குவாதம் என்கிறோம். குடும்பத்தில் முன்னோர்கள் யாருக்காவது இருந்தால் மற்றவர்களுக்கும் வர சாத்தியம் அதிகம்.


அறிகுறிகள்

மூட்டழற்சிக்கு நாட்பட்ட வலி, மூட்டு இறுக்கம், நடக்கும் போதோ, வேலைசெய்த பிறகோ வலி அதிகமாகும்.முடக்குவாதத்திற்கு ஆரம்பத்தில் வலி தெரியாது, நாட்பட்ட வலி மற்றும் பல மூட்டுகளில் வலி போன்றவை ஏற்படும். உடம்பு முழுவதும் பாதிப்படையும்.


சிகிச்சைகள்

மூட்டுவலியை கட்டுப்படுத்த மட்டுமே முடியும். ஆதலால் வலி தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். மூட்டழற்சிக்கு முதல் சில வருடங்களுக்கு உடற்பயிற்சி கொடுக்க வேண்டும். பின்னர் ஊசியின் மூலம் மருந்து ஏற்றப்படும். மருந்துகளில் குணமாகாத பட்சத்தில் மூட்டுமாற்று அறுவை சிகிச்சை செய்யவேண்டி ஏற்படும்.
ஆனால் முடக்குவாதத்திற்கு மருந்துகள் மட்டுமே போதுமானவை .

மூட்டுவலி ஏற்படாமல் தவிர்த்தல்

உடல் எடை மிகவும் முக்கியமானது. உடல் பருமன் மூட்டுகளிலே தங்கியுள்ளது. பருமன் கூடக்கூட மூட்டுகளில் ஏற்படும் பாதிப்பு அதிகம். எனவே உடல் எடை கூடாமல் வயதுக்கேற்ப பேண வேண்டும்.
நடத்தல், நீச்சலடித்தல், சிறிய வேலைகளைச் செய்தல், வாரம் ஐந்து நாட்கள் மிதமான நடைபயிற்சி செய்தல், சமவிகித உணவுகளை உண்ணுதல், கொழுப்புள்ள உணவுகளை தவிர்த்தல், கல்சியம், விற்றமின், புரதமுள்ள உணவுகளை அதிகம். உண்ணுவதன் மூலம் மூட்டுவலி, மூட்டு தேய்மானம் ஏற்படுவதைத் தடுக்கமுடியும்.