2018: தமிழ் மக்களுக்குப் புத்தாண்டுப் பலன் எப்படி?

ஆண்டுகளைக் கணக்கிடும் பொழுதும், மதிப்பிடும் பொழுதும் கல்வியாண்டு, புலமையாண்டு, நிதியாண்டு என்றெல்லாம் பிரிப்பதுண்டு. ஆனால் அரசியலாண்டு என்று பிரிப்பதில்லை. அரசியலில் ஆட்சி மாற்றங்களின் போதும் அமைச்சரவை மாற்றங்களின் போதும், தலைமைத்துவ மாற்றங்களின் போதும், படைத்துறை வெற்றிகளின் போதும் நிலமைகள் மாறுவதுண்டு. எனினும் ஒரு ஆண்டுக்குள் நிகழ்ந்திருக்கக் கூடிய திருப்பகரமான மாற்றங்களின் அடிப்படையில் ஓர் அரசியலாண்டைக் குறித்து மதிப்பீடு செய்யலாம். இப்பொழுது புத்தாண்டை மதிப்பீடு செய்வதென்று சொன்னால் அதை கடந்த ஆண்டிலிருந்தே செய்யத் தொடங்க வேண்டும். ஏனெனில் கடந்த ஆண்டில் தமிழ் மக்கள் பெற்றவை எவை? இழந்தவை எவை? என்பவற்றைத் தொகுத்து ஓர் ஐந்தொகைக் கணக்கைப் போட்டு மொத்தமாக தமிழ் மக்களின் பேரம் கடந்த ஆண்டில் அதிகரித்துள்ளதா? இல்லையா? என்பதைக் கணக்கிட்டால்தான் அப்பேரத்தின் அடிப்படையில் புதிய ஆண்டைக் குறித்து கணிப்புக்களைச் சொல்லலாம். இந்த அடிப்படையில் கடந்த ஆண்டில் தமிழ் மக்களின் பேரம் எவ்வாறு இருந்தது என்பதனை மூன்று பரப்புக்களில் மதிப்பிடுவோம். முதலாவது அனைத்துலக மற்றும் பிராந்தியப் பரப்பு. இரண்டாவது தென்னிலங்கை. மூன்றாவது தாயகம். இவற்றை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

அனைத்துலக மற்றும் பிராந்தியப் பரப்பில் தமிழ் மக்களின் பேரம் தொடர்ந்தும் தாழ்ந்து செல்கிறது. மேற்கு நாடுகளால் பின்னிருந்து ஊக்குவிக்கப்பட்ட ஓர் ஆட்சி மாற்றத்தின் மூலம் உருவாக்கப்பட்ட மைத்திரி, ரணில் அரசாங்கமானது மேற்கின் செல்லப்பிள்ளையாகவே கடந்த ஆண்டிலும் காணப்பட்டது. தமது செல்லப் பிள்ளையைப் பாதுகாக்கும் விதத்தில் மேற்கு நாடுகள் ஐ.நாவில் இலங்கை அரசாங்கத்திற்கு மேலும் இரண்டாண்டுகள் கால அவகாசத்தை வாங்கிக் கொடுத்துள்ளன. தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் இக் கால அவகாசத்திற்கு எதிராக செயற்பட்ட போதிலும் ஐ.நாவில் அரசாங்கம் வெற்றிகரமாக கால அவகாசத்தைப் பெற்றுக்கொண்டது. நிலைமாறுகால நீதியை ஸ்தாபிப்பதற்காக அரசாங்கம் ஐ.நாவில் 2015ல் ஒப்புக்கொண்ட சுமார் 25 பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கே இக் கால அவகாசம் வழங்கப்பட்டது. இக் கால கட்டத்துள் அரசாங்கம் ஐ.நாவுக்கு கணக்கு காட்டுவதற்காக பொய்யிற்கு வீட்டு வேலைகளைச் செய்கிறது என்பது ஐ.நாவுக்கும் தெரியும்.

ஐ.நாவின் சிறப்புத் தூதுவர்களும், அறிக்கையாளர்களும், பிரதானிகளும் குறுகிய கால இடைவெளிக்குள் செறிவாக வந்து போன ஆண்டு கடந்த ஆண்டாகும். இது மகிந்தவின் காலத்தோடு ஒப்பிடுகையில் மேற்கு நாடுகளைப் பொறுத்தவரை ஒரு பெரிய முன்னேற்றமாகவே கருதப்படுகிறது. இலங்கைத் தீவு ஐ.நாவிற்கு வரையறையின்றித் திறந்து விடப்பட்டதான ஒரு தோற்றத்தை இது ஏற்படுத்துகின்றது. ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்களின் அறிக்கைகளும் காட்டமானவைகளாகக் காணப்படுகின்றன. இவ் அறிக்கைகளை வைத்து பார்த்தால் ஐ.நா இலங்கை அரசாங்கத்தை தனது வழிக்குக் கொண்டுவந்து விட்டது போல ஒரு தோற்றம் உண்டாகும். ஆனால் இது ஒரு மாயத் தோற்றம். தமிழ் மக்களை ஐ.நாவை நோக்கி மேலும் காத்திருக்க வைப்பதற்கு இது உதவும். தமிழ் மக்கள் ஐ.நாவிடம் நம்பிக்கை இழந்து விடாமலிருப்பதற்கு இவை உதவும். ஆனால் நடைமுறையில் தமிழ் மக்களுக்கு என்ன கிடைத்திருக்கிறது?

ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்கள் மற்றும் மனித உரிமைகள் ஆணையாளர் போன்றோரின் கருத்துக்களுக்கும், ஐ.நாவின் உத்தியோகபூர்வ தீர்மானங்களுக்கும், கருத்துக்களுக்கும் இடையிலுள்ள இடைவெளியானது தமிழ் மக்களின் பேரம் சரிந்து செல்வதையே காட்டுகின்றது. உலக நீதி என்பது உலக அரசியல்தான். எனவே ஐ.நாவின் நீதி என்பதும் அரசுகளின் நீதி தான். அது இலங்கை அரசாங்கத்தைப் பாதுகாக்கும் நீதிதான். தமிழ் மக்கள் கேட்டது இனப்படுகொலைக்கு எதிரான பரிகார நீதியை. ஆனால் ஐ.நா வழங்கியதோ நிலைமாறுகால நீதியை. தமிழ் மக்கள் இனப்படுகொலைக்கு உள்ளானார்கள் என்பதனை ஐ.நா இன்று வரையிலும் ஏற்றுக்கொள்ளவில்லை. அவ்வாறு ஐ.நாவை ஏற்றுக்கொள்ளச் செய்யும் அளவிற்கு தமிழ் லொபி ஒரு பலமான வளர்ச்சியைப் பெறவுமில்லை. இப்படிப் பார்த்தாலும் தமிழ்ப் பேரம் தாழ்ந்தே கிடக்கிறது. அரசாங்கம் அனைத்துலக விசாரணையை கலப்பு விசாரணையாக மாற்றி அதையும் பின்னர் உள்நாட்டு விசாரணையாக மாற்றி அதை தனது வெற்றிகரமான அடைவாக படைத்தரப்பிற்கு காட்டிக் கொண்டிருக்கிறது. ஐ.நா தொடர்ந்தும் அதை மௌனமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறது. இது மேற்குலக அரங்கு.

அடுத்தது பிராந்திய அரங்கு. ஜெயலலிதாவின் திடீர் மறைவையடுத்து தமிழ்;ப்பேரம் தமிழ்நாட்டில் ஒப்பீட்டளவில் தாழ்ந்து விட்டது. தீவிர ஈழ உணர்வாளர்களை கைது செய்து சிறையில் வைக்குமளவிற்கு அங்கே நிலமைகள் காணப்படுகின்றன. ஜெயலலிதா விட்டுச் சென்ற வெற்றிடமானது ஈழத்தமிழர்களுக்கு ஒப்பீட்டளவில் பாதகமானதே. அதே சமயம் இலங்கைத் தீவில் ஆட்சி மாற்றத்தின் பின்னரும் சினாவின் பிரசன்னத்தில் குறிப்பிடத்தக்க அளவு மாற்றங்கள் இல்லை என்பது இந்தியாவிற்கு உறுத்தலான ஒரு விடயம்தான். ரணில், மைத்திரி அரசாங்கமானது அமெரிக்கா – சீனா – இந்தியா ஆகிய மூன்று பெரும் துருவ இழுவிசைகளுக்கிடையே மிகவும் நுட்பமான ஒரு சமநிலையைப் பேண விழைகிறது. இதனால் சீனாவை அது பகை நிலைக்குத் தள்ள விரும்பவில்லை.இப்பொழுது இலங்கைத் தீவின் ஆகப் பெரிய தனி வணிகப் பங்காளியாக சீனா மாறியிருக்கிறது. 1977இலிருந்து இந்தியா வகித்துவந்த இடம் இது. மகிந்தவின் காலத்தில் சீனாவோடு ஏற்பட்ட உடன்படிக்கைகளை சமயோசிதமான சுதாகரிப்புக்களோடு ரணில் – மைத்திரி அரசாங்கம் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தி வருகிறது. இதனால் இலங்கைத் தீவில் சீனாவின் பிரசன்னச் செறிவில் பெரிய மாற்றங்கள் எவையும் ஏற்படவில்லை. இது இந்தியாவிற்கு சாதகமான போக்கு அல்ல. எனினும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையைப் பொறுத்தவரை தமிழ் மக்களுக்கு சாதகமான திருப்பங்கள் எதையும் அங்கே வெளிப்படையாகக் காணமுடியவில்லை. இதுதான் பிராந்திய மட்டத்தில் தமிழ் மக்களின் தற்போதைய பேரம்.

அடுத்தது தென்னிலங்கை. கூட்டரசாங்கம் இடைக்கிடை ஈடாடும். எனினும் அது எவ்வாறோ தன்னைச் சுதாகரித்துக் கொண்டு முன்செல்கிறது. இந்த அரசாங்கம் உள்நாட்டில் பலவீனமானதாகக் காணப்படலாம். மத்தியவங்கி பிணைமுறி தொடர்பான விவகாரத்தில் இந்த அரசாங்கம் மேலும் ஸ்தரமற்றதாக மாறக்கூடும். ஆனால் இந்த அரசாங்கத்தின் உயிர்நிலை நாட்டுக்கு வெளியிலும் இருக்கிறது. இந்த அரசாங்கத்தைப் பாதுகாக்க வேண்டிய தேவை மேற்கு நாடுகளுக்கு உண்டு. இந்தியாவிற்கும் உண்டு. இந்த அரசாங்கம் சீனாவோடு தன்னைச் சுதாகரித்துக் கொண்டாலும், மேற்கோடும், இந்தியாவோடும் அரவணைப்பாகவே நடந்து கொள்கிறது. எனவே மகிந்தவை விடவும் இந்த அரசாங்கத்தை மேற்படி தரப்புக்கள் ஒப்பீட்டளவில் கூடுதலாக விரும்புகின்றன. இடைக்கால அறிக்கை தொடர்பில் வெளித்தரப்புக்களை நம்பிக்கொண்டிராமல் உள்நாட்டிலும் கடும்போக்காளர்களோடு உரையாட வேண்டுமென்று சம்பந்தர் நம்புவதாகத் தெரிகிறது. ஆனால் இது தொடர்பில் அவர் மகிந்தவை அணுகியதை அமெரிக்கத் தூதரகம் விருப்பத்தோடு பார்க்கவில்லையென்று கூறப்படுகிறது.பிணைமுறி விவகாரத்தில் கூட்டரசாங்கம் மேலும் ஈடாடக்கூடும். ஆனாலும் மேற்கு நாடுகள் இந்த அரசாங்கத்தை எப்படியாவது பாதுகாக்கவே எத்தனிக்கும்.

நிலைமாறு கால நீதி எனப்படுவது சாராம்சத்தில் பொறுப்புக்கூறல்தான். ஆனால் போர்க்குற்ற விசாரணை தொடர்பிலும் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பிலும் மேற்கு நாடுகளோ அல்லது இந்தியாவோ தமக்குள்ள பொறுப்புக்கூறும் பங்கை ஏற்றுக்கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. இவ்வாறு மேற்கு நாடுகளும் இந்தியாவும் தமது பங்கிற்கு பொறுப்புக் கூறாத ஒரு வெற்றிடத்தில் தான் இடைக்கால அறிக்கை வெளிவந்திருக்கிறது. கடந்த ஆண்டு எனப்படுவது இடைக்கால அறிக்கையின் ஆண்டுதான். தமிழ் மக்களின் அடிப்படைக் கோரிக்கைகளான தாயகம், சுயநிர்ணயம் போன்றவற்றிற்கு எதிரான அம்சங்களே இடைக்கால அறிக்கையில் அதிகம் உண்டு. அந்த அறிக்கை தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாகக் கருதவில்லை. அப்படியொரு அறிக்கைக்காக தமிழ்த் தலைமைகள் அதிக பட்சம் விட்டுக் கொடுத்திருக்கிறார்கள். அப்படி விட்டுக் கொடுத்து விட்டு இப்பொழுது வார்த்தைகளை வைத்து விளையாடுகிறார்கள். இடைக்கால அறிக்கையின் அடிப்படையில் கூறின் தமிழ் பேரம் தென்னிலங்கையில் மிக மோசமாகச் சரிந்த ஓர் ஆண்டாகக் கடந்த ஆண்டைக் கூறலாம்.

அதே சமயம் தமிழ் எதிர்ப்பு அரசியலின் கூர் முனை போலக் காணப்படும் விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்று முன்நகர்த்தப்பட்டதும் கடந்த ஆண்டுதான். எனினும் முன்னாள் ஆயுதப் போராட்ட அமைப்புக்கள்;,தமிழ் மக்கள் பேரவை மற்றும் அவருக்கு வாக்களித்த மக்கள் போன்றோரின் பக்க பலத்தோடு விக்னேஸ்வரன் தன் பதவியைக் காப்பாற்றிக் கொண்டார். எனவே இதனை அதன் நடைமுறை அர்த்தத்தில் கூறின் தமிழ் எதிர்ப்பு அரசியலை ஏதோ ஒரு விதத்தில் தக்க வைத்துக் கொண்ட ஓர் ஆண்டாகவும் கடந்த ஆண்டைப் பார்;க்கலாம். ஆனால் தமிழ் எதிர்ப்பு அரசியலை ஓரணியில் ஒரு மாற்று அணியாகத் திரட்டுவதற்கான முயற்சிகள் சறுக்கிய ஓர் ஆண்டாகவும் கடந்த ஆண்டைக் கூறலாம்.

விக்னேஸ்வரனின் எழுச்சியோடும் தமிழ் மக்கள் பேரவையின் எழுச்சியோடும் ஒரு மாற்று அணியை நோக்கி திரண்டு வந்த எதிர்பார்ப்புக்கள் உள்ளூராட்சிசபைத் தேர்தலோடு சிதறிப் போய்விட்டன. தமிழ் எதிர்ப்பு அரசியலை ஒரு மாற்று அணியாக ஒரு முகப்படுத்த உழைத்த தரப்புக்களிற்கு ஏமாற்றத்தைக் கொடுத்து விட்டே கடந்த ஆண்டு முடிந்திருக்கிறது.

எனவே கூட்டிக்கழித்துப் பார்த்தால் தமிழ் பேரம் மிகவும் தாழ்ந்து போய் ஓர் இடைக்கால அறிக்கையை பெற்றிருக்கும் ஒரு பின்னணிக்குள் தமிழ் எதிர்ப்பு அரசியலின் கூர் முனை போலக் காணப்படும் விக்னேஸ்வரனின் தலைமையின் கீழ் ஒரு மாற்று அணியானது எழுச்சிபெறத் தவறியிருக்கிறது. தமிழ் மக்கள் பேரவையின் உருவாக்கத்தோடு படிப்படியாகப் பலப்பட்டு வந்த மாற்று இடையூடாட்டத் தளமும் இப்பொழுது நிச்சயமற்றதாக மாறியிருக்கிறது. இது இடைக்கால அறிக்கையை ஆதரிக்கும் தரப்புக்களுக்கே வசதியானது. இப்படிப் பார்த்தால் தாயகத்திலும் தமிழ்ப் பேரம் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவுக்கு இல்லை.

இப்படியொரு பின்னணிக்குள் இந்த ஆண்டானது ஒரு தேர்தல் ஆண்டாக மாறக்கூடும். உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகளை வைத்து யு.என்.பியும், எஸ்.எல்.எவ்.பியும் புதிய முடிவுகளை எடுக்;கக்கூடும். இதனால் புதிய சேர்க்கைகளுக்கும் இடமுண்டு. புதிய உடைவுகளுக்கும் இடமுண்டு. அதே சமயம் தமிழ்த் தரப்பில் தமிழரசுக் கட்சியும் அதன் பங்காளிகளும் சுரேஸ் பிறேமச்சந்திரனின் அணியும், கஜேந்திரகுமாரின் அணியும் அவரவரின் தனிப் பலங்களை நிரூபிக்கப் போகும் ஒரு தேர்தலாக உள்ளூராட்சி சபைத் தேர்தல் அமையும். கஜன்அணியும், சுரேஸ் அணியும் பெறப்போகும் வாக்குகளின் மொத்த எண்ணிக்கை, கூட்டமைப்பு பெறக்கூடிய மொத்த வாக்குகளை விட அதிகமாக இருந்தால் அது புதிய அரசியற் சுற்றோட்டங்களை ஏற்படுத்தும். இத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் இம் மூன்று கூட்டுக்களும் தனது பலம் பலவீனங்களைக் குறித்து காய்தல் உவத்தலின்றி சுயவிசாரணை செய்யுமிடத்து தேர்தல் முடிவுகளுக்குப் பின்னரான புதிய சேர்;க்கைகளுக்கும், உடைவுகளுக்கும் இடமுண்டு.

அதோடு விக்னேஸ்வரன் தன்னுடைய அடுத்த கட்ட அரசியலைக் குறித்து முடிவெடுக்க வேண்டிய ஆண்டாகவும் இந்த ஆண்டு அமையும். தமிழ் மக்கள் பேரவையை மேலும் பலப்படுத்துவது என்று அவர் முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது. ஆனால் பேரவையின் இயங்கு தளமாகக் காணப்பட்டது கஜன் அணியும், சுரேஸ் அணியும்தான். அந்த இரண்டு அணிகளும் தனித்தனியாகச் சென்றிருக்கும் ஒரு சூழலில் பேரவையை எப்படி நடைமுறைச் சாத்தியமான விதங்களில் பலப்படுத்துவது? கடந்த ஆண்டுகளைப் போல விக்னேஸ்வரன் தனது முடிவுகளை இந்த ஆண்டும் ஒத்தி வைக்க முடியாது. அவர் ஒத்தி வைக்க விரும்பினாலும் அவருடைய எதிரணி அதற்கு விடாது. இப்பொழுது நடப்பது அறிக்கைப்போர். ஆனால் இந்த ஆண்டின் முடிவிற்குள் நிஜமான ஒரு மோதலுக்கு விக்னேஸ்வரன் தயாராக வேண்டியிருக்கும். அது சில சமயம் தமிழ் எதிர்ப்பு அரசியலை ஒரு புதிய கூட்டிற்குள் கொண்டு வரக்கூடும். விக்னேஸ்வரன் ஒப்புக்கொள்வாரோ? இல்லையோ இடைக்கால அறிக்கையானது தமிழ் அரசியலைப் பொறுத்தவரை திட்டவட்டமான பிரிகோடுகளை ஏற்படுத்தும். மாகாண சபைத் தேர்தலும் அவ்வாறான வாய்ப்புக்களை அதிகப்படுத்தும். இடைக்கால அறிக்கைக்கு எதிரான தரப்புக்களை திரட்டி ஒரு முகப்படுத்த வேண்டிய ஒரு வரலாற்றுப் பொறுப்பை விக்னேஸ்வரன் தட்டிக்கழி;க்க முடியாதிருக்கும்.

எனவே கடந்த ஆண்டில் தமிழ் மக்களின் பேரம் எப்படியிருந்தது என்று தொகுத்துப் பார்த்தால் மேற் சொன்ன மூன்று அரங்குகளிலும் அது சரிந்து போயிருக்கின்றது. ஐ.நா.த் தீர்மானங்களும், ஐ.நாவில் வழங்கப்பட்ட கால அவகாசங்களும் அதைத்தான் காட்டுகின்றன. ஜெயலலிதாவிற்குப் பின்னரான வெற்றிடம் அதைத்தான் காட்டுகின்றது. இடைக்கால அறிக்கையும் அதைத்தான் காட்டுகின்றது. உள்ளூராட்சி சபைத் தேர்தலையொட்டி ஏற்பட்டிருக்கும் உடைவுகளும் அதைத்தான் காட்டுகின்றன. அதாவது கூட்டிக் கழித்துச் சொன்னால் கடந்த ஆண்டில் தமிழ்ப் பேரம் தாழ்ந்து போய்விட்டது. மிகத் தாழ்ந்த பேரத்தோடு ஓரு புதிய ஆண்டு பிறந்திருக்கிறது. இப்பேரத்தை உயர்த்தக் கூடிய ஒரு தலைமை அல்லது ஒரு கூட்டு அல்லது ஒரு மக்கள் இயக்கம் வெற்றிகரமாக மேலெழுந்தால் மட்டும்தான் இந்த ஆண்டு தமிழ் மக்களுக்கு நற்பலன்களைத் தரும் ஓராண்டாக மாறும்.

நிலாந்தன்…