யாழ்.நகரை அண்டிய தட்டாதெரு பகுதியில் வீதியால் சென்ற பெண் ஒருவரின் தாலியை அறுத்துகொண்டு தப்பியோடிய கொள்ளையர்கள் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த இரகசிய கண்காணிப்பு கமராவால் சிக்கிக்கொண்டனர்.
இந்த காணொளி உதவியுடன் கொள்ளையர்கள் இருவரையும் அரை மணி நேரத்தில் யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸார் மடக்கிபிடித்ததுடன் அறுக்கப்பட்ட 10 பவுண் தாலிக்கொடியும் அவர்களிடம் இருந்து மீட்கப்பட்டது. கைதான இரு கொள்ளையர்களும் சுன்னாகம் மற்றும் தெல்லிப்பழை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வட்டுக்கோட்டையைச் சேர்ந்த பெண் ஒருவர் யாழ்.நகருக்கு அலுவல் நிமித்தமாக வந்து மதியம் தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். தட்டாதெரு பகுதியில் மதிய வேளை இப்பெண் சென்றுகொண்டிருந்த போது பின் தொடர்ந்த இருவர் நடமாட்டம் அற்ற இடத்தில் வைத்து தாலியை அறுத்துக்கொண்டு தமது மோட்டார் சைக்கிளில் தப்பியோடினர்.
தாலியை பறிகொடுத்த பெண் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு விரைந்து சென்று முறைப்பாடு செய்தார். வழிப்பறி இடம்பெற்ற பகுதிக்கு வந்த பொலிஸார் அந்த பகுதியில்பொருத்தியிருந்த சி.சி.ரி.வி. கமராவின் உதவியுடன் விசாரணைகளை ஆரம்பித்தனர்
கமராவில் பதிவான காணொளியில் கொள்ளையர்கள் அடையாளம் காணப்பட்டனர். அதனையடுத்து துரிதமாக செயற்பட்ட பொலிஸார் கொள்ளையர்கள் இருவரையும் மடக்கி பிடித்தனர். அத்துடன் அவர்களிடம் இருந்து தாலிக்கொடியும் மீட்கப்பட்டது.
சிக்கிய கொள்ளையர்கள் இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.