பகல் நேரங்களில் பணியாற்றுபவர்களை விட இரவு நேரங்களில் பணியாற்றி விட்டு வாகனம் ஓட்டுபவர்கள் அதிக விபத்துகளை ஏற்படுத்துவார்களென அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது.
அந்த நாட்டின் “பிரகம் ஆன்ட் உமன்ஸ் ஹொஸ்பிட்டல்’ மேற்கொண்ட அந்த ஆய்வு குறித்து பி.என்.ஏ.எஸ். அறிவியல் இதழில் கூறப்பட்டுள்ளதாவது;
ஆய்வின் முதல்கட்டமாக இரவு நேரங்களில் பணியாற்றும் 16 பேர் ஆய்வுக்குட்படுத்தப்பட்டனர். அவர்கள் இரவு பணியாற்றிய பிறகு சராசரியாக ஏழரை மணி நேரம் தூங்க அனுமதிக்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து கார் பந்தய மைதானத்தில் தொடர்ந்து 2 மணி நேரத்துக்கு அவர்கள் கார்களை செலுத்திச் சென்றனர்.
அடுத்த கட்டமாக அதே நபர்கள் பகல் நேரப் பணிக்கு அனுப்பப்பட்டு இரவு நேரத்தில் ஏழரை மணி நேரம் தூங்க அனுமதிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து முன்பைப் போலவே மீண்டும் 2 மணி நேரம் கார்களை செலுத்தச் செய்து அவர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த இரண்டு கட்டங்களையும் ஒப்பு நோக்கிய போது பகல் நேரம் பணியாற்றிய பிறகு அவர்கள் சிறப்பாக வாகனம் ஓட்டியதும் மோதலை ஏற்படுத்தக்கூடிய தவறுகளைச் செய்யவில்லை என்பதும் தெரியவந்தது.
அதே நேரம் இரவு நேரப் பணிக்கு பிறகு போதிய அளவு தூங்கியிருந்தாலும் வாகனம் செலுத்தும் போது அவர்கள் ஏராளமான குளறுபடிகள் செய்ததும் விபத்துகளை ஏற்படுத்தக்கூடிய தவறுகளை அதிகளவில் செய்ததும் தெரிய வந்தது.
வாகனம் செலுத்தும் போது அவர்களது கண்களில் தூக்கத்துக்கான அறிகுறிகள் தென்பட்டன.
இதன்மூலம் இரவு நேரப் பணியாளர்கள் வீதி விபத்துகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பது தெரியவந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.