அரசாங்கத்திற்கு சொந்தமான வாகனங்களின் எண்ணிக்கை 57, 961என்று கணக்கிடப்பட்டுள்ளதாக பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் காணி அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான கயந்த கருணாதிலக தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான கயந்த கருணாதிலக இதனை குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் சொத்துக்கள் மற்றும் செலவினங்கள் முகாமைத்துவ கண்காணிப்பு நோக்கில் 2017 மார்ச் மாதம் 07ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட கொம்ப்ட்ரோலர் நாயக பணியகம் ஒன்று நிதி மற்றும் ஊடக அமைச்சின் கீழ் அமைக்கப்பட்டது.
அரசாங்கத்தின் அனைத்து நிதி அல்லாத சொத்துக்களை உள்ளடக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட மத்திய அரசாங்கத்திற்கு சொந்தமான சொத்து ஆவணப்பட்டியலை முன்னெடுப்பதே இந்த அலுவலகத்தின் முக்கிய பணியாகும்.
இந்த பணியத்திடம் 2017 டிசம்பர் மாதம் 14 ஆம் திகதியன்று கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமைவாக அரசாங்கத்திற்கு சொந்தமான வாகனங்கள் குறித்த எண்ணிக்கைய நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர அமைச்சரவைக்கு சமர்ப்பித்தார்.
அமைச்சரவை இந்த தகவல்களை கவனத்தில் கொண்டுள்ளது. இந்த தகவல்களுக்கமைவான சொத்துவிபரங்கள் பின்வருமாறு,
அரசாங்கத்திற்கு சொந்தமான மொத்த வாகனங்களின் எண்ணிக்கை 57, 961 ஆகும். இதில் பயன்படுத்தக்கூடிய வாகனங்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்து 238.
மத்திய அரசாங்கத்திற்கு சொந்தமான வாகனங்கள் 26 ஆயிரத்து 732. அரசபணிகளுக்கான வாகனங்கள் 23ஆயிரத்து 506.
அவற்றில் பயன்படுத்த முடியாத வாகனங்களின் எண்ணிக்கை 7ஆயிரத்து 723. மத்திய அரசாங்கம் 5 ஆயிரத்து 922, அரசபணிகளுக்கான வாகனங்கள் 1,801 ஆகும்.
இவற்றில் பயன்படுத்த முடியாதுள்ள வாகனங்கள் குறித்து தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்குவதற்கு அமைச்சரவை ஆலோசனை வழங்கியுள்ளதாக அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான கயந்த கருணாதிலக தெரிவித்தார்.