1976 ஆம் ஆண்டு உலகை மிரட்டி பலரைப் பலியெடுத்த, எந்த மருந்தாலும் அழிக்க முடியாத இபோலா வைரஸ் 38 வருடங்கள் கழித்து தற்போது மீண்டும் பலரை பலியெடுக்கத் தொடங்கியுள்ளதால் உலக நாடுகள் மிரண்டு போயுள்ளதுடன் தமது நாடுகளை இபோலா வைரஸிடமிருந்து பாதுகாக்க வழி வகைகளைத், தேடிக் கொண்டிருக்கின்றனர்.
இந்த வைரஸ் 1976 ஆம் ஆண்டு முதலில் பரவியது. அதனால் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தார்கள். இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியுமே தவிர இதனை அழிக்க முடியாது. இது எயிட்ஸை விட 50 மடங்கு பேராபத்து தரக்கூடிய வைரஸ் ஆகும். 1976 ஆம் ஆண்டு இந்த வைரஸ் மனிதர்களை தாக்கியவேளை தொற்றுக்கு உள்ளாகிய அனைவரும் இறந்துபோனார்கள்.
இதன் பின்னரே இதனை பரவவிடாமல் தடுத்து ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்கள். ஆனால் இத்தனை ஆண்டுகள் கழித்து அது மீண்டும் எவ்வாறு பரவ ஆரம்பித்துள்ளது என்பது தெரியவில்லை.
இந்த வைரஸ் ஒருவரை தாக்கினால் அவர் 7 அல்லது 8 நாட்களில் நிச்சயம் இறப்பார். அப்படி என்றால் இந்த வைரஸ் தாக்கிய நபர்கள் அல்லது அனைத்து விலங்குகளும் இறந்திருக்க வேண்டும் அல்லவா? இப்போது எப்படி மீண்டும் அந்த வைரஸ் உயிர் பெற்றது என்று மருத்துவர்கள் குழம்பிப் போயுள்ளார்கள்.
இது பறவையில் இருந்து தொற்றியிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது. முதலில் ஆபிரிக்க நாடான நைஜீரியாவில் தான் இதன் தாக்கம் தொடங்கியுள்ளது. இதுவரை 750 பேரை இந்த வைரஸ் பலியாக்கியுள்ளது. 1500 க்கு மேற்பட்டோருக்கு தொற்றியுள்ளது.
இது இவ்வாறு இருக்க இந்த வைரஸ் படு வேகமாகப் பரவி வருகிறது. பிந்திய தகவலின்படி ஹொங்கொஸ்காகில் இந்நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் உள்ளார் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இனி அவர் யார் யாருடன் பழகினார் என பார்த்து அவர்களையும் தனிமைப்படுத்த வேண்டும்.
இன்னும் சில தினங்களில் இது சுமார் 30,000 பேருக்கு பரவ வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ள பிரித்தானியா, உடனடியாக பாதுகாப்பு சபையைக் கூட்டி இந்நோய் பிரித்தானியாவை தாக்கினால் என்ன செய்வது என்று ஆராய்ந்துள்ளது.
உலகில் உள்ள மக்கள் பலர் தமது விடுமுறைக்காக பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், இந்த வைரஸ் படு வேகமாகப் பரவ வாய்ப்புள்ளது. குறிப்பாக ஆபிரிக்க நாடுகளுக்குச் சென்று வந்தவர்களோடு பழகுவதை உடனடியான குறைப்பது நல்லது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. நைஜீரியா நாட்டோடு அனைத்து எல்லைகளையும் அண்டை நாடுகள் காலவரையறையின்றி மூடியுள்ளன. ஆனால் அதற்கு முன்னரே இந்நோய் பல நாடுகளுக்கு பரவிவிட்டது.
இந்நோயின் தாக்கத்துக்கு உள்ளானவர்கள் மிகவும் பரிதாபகரமான முறையில் இறக்கின்றார்கள். இந்த வைரஸ் நரம்பு மண்டலத்தை தாக்குகின்றது. முக்கிய நரம்புகளை தாக்கி கோரையாக்கி வெளிப்புறத் தோலில் கோரைகளை (ஓட்டைகளை) உண்டாக்குகின்றது. காய்ச்சல், வாந்தி போன்ற அறிகுறிகள் உடனே இருக்கும். தோல் பழுதடைந்து சதைகள் தொங்கிப் போய் வயதானவர்கள் போல நோயாளி மாறி பின்னரே இறப்பார்கள்.
இதனை இபோலா தீநுண்ம நோய் (Ebola Virus Disease ) (EVD) அல்லது இபோலா குருதி ஒழுக்குக் காய்ச்சல் (Ebola Hermorrhagic Fever) (EHF) என்று இபோலா தீ நுண்பமத்தின் நான்கு வகைகளால் மனிதரில் ஏற்படும் நோய் பெயரிடப்பட்டுள்ளது. இது ஓர் உயிருக்கு கேடு விளைவிக்கும் கடுமையான நோயாகும். கடுமையான குருதி இழப்பு ஏற்பட்டு நோய் வாய்ப்பட்ட பத்து பேரில் சராசரியாக ஐந்து முதல் ஒன்பது பேர் உயிரிழக்கின்றனர்.
1976 ஆம் ஆண்டு ஆபிரிக்காவின் சையர் நாட்டின் இபோலா ஆற்றங்கரையில் இத் தீ நுண்மம் முதலில் கண்டறியப்பட்டதால் இதற்கு இபோலா தீ நுண்மம் என்ற பெயர் ஏற்பட்டது.
நோய் பரவல்
இந்நோய்வாய்ப்பட்ட நோயாளியின் நீர்மங்களுடன் தொடர்பு கொண்டவர்களுக்கு அவற்றின் மூலமாக நோய் உட்செல்கிறது. இது காற்றின் மூலமாக பரவுவதில்லை. இபோலா நோயுற்றவர்கள் ஏராளமாக குருதி இழப்பர்.
அவர்களது வயிற்றுப் போக்கிலும் வாந்தியிலும் குருதி இருக்கும்.கடுமையான நோயுற்றவர்களின் மூக்கு, காதுகள் மற்றும் ஆண் / பெண் குறிகளிடமிருந்து குருதி ஒழுகும். இந்த நீர்மங்கள் மற்றவர்கள் நோய் பற்றிக் கொள்ள காரணமாக அமைகின்றன.
நோய் அறிகுறிகள்
ஒருவருக்கு இபோலா தொற்றும் போது முதல் அறிகுறிகள் மற்ற நோய்களை ஒத்திருக்கும். காய்ச்சல், உடல் தளர்ச்சி, தலைவலி, வயிற்றுவலி, மூட்டுவலி மற்றும் தொண்டை வலி ஆகியன முதல் அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகளால் மலேரியா அல்லது குடற்காய்ச்சல் நோயென தவறாக எண்ணப்படுவதுண்டு.
பின்னர் நோய் தீவிரமாகி குருதி இழக்கத் தொடங்குகின்றனர். இந்நிலையில் அதிர்ச்சி குறைந்த குருதி அழுத்தம், விரைவான நாடித்துடிப்பு (இதயத் துடிப்பு) மற்றும் உறுப்புகளுக்கு குறைந்த குருதி வழங்கல் ஆகியன அறிகுறிகளாகும். இவற்றால் உறுப்புகள் செயலிழக்கத் தொடங்குகின்றன. இதனை உறுப்பு செயலிழப்பு என்கின்றனர். மேலும் நோயாளியின் உடலை இறுக்கமாவதால் படுக்கையிலேயே இருக்க வேண்டியதாகவுள்ளது.
மருத்துவ சிகிச்சை
இந்நோய்க்கு மருந்துகள் இல்லை. ஆயினும் நோயாளிக்கு நோயைத் தாங்க தகுந்த மருத்துவ ஆதரவு அளித்தால் உடலின் எதிர்ப்பாற்றலால் பலர் உயிர் பிழைக்கின்றனர். இபோலா நோயாளிகளுக்கு வயிற்றுப் போக்கு, வாந்தி மற்றும் குருதி இழப்பினால் நேர்ந்த நீர்மஇழப்பை சரிகட்ட அவை தொடர்ச்சியாக கொடுக்கப்பட்டு வரவேண்டும். மருத்துவமனையில் சிரைவழி நீர்மங்கள், குருதி ஆகியவற்றைக் கொடுப்பதுடன் , குருதி அழுத்தம் , சுற்றோட்டத் தொகுதி சீர்மை ஆகியவற்றுக்கான மருந்துகளும் அளிக்கப்படுகின்றன.
நோயுற்ற மக்களை தனிமைப்படுத்தி மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கின்றனர். நோயாளிகள் வெளியேற்றும் நீர்மங்கள் நோய் பரவாதவாறு கழிக்கப்படுகின்றன. இந்நோய்க்கான தடுப்பு மருந்தை கண்டறிய அறிவியலாளர்கள் முயன்று வருகின்றனர்.
இதேவேளை, இலங்கைக்கு வருகைதரும் சுற்றுலாப்பயணி ஒருவர் பயங்கரமான இபோலா வைரஸைக் கொண்டுவரும் வாய்ப்பு மிக அரிதானது எனக்கருதும் அரசாங்க நோய்ப்பரம்பரையியல் அலகின் பணிப்பாளர் வைத்தியர் பிரபா பலிகவதன, இபோலா இங்கு காணப்படுமிடத்து அதனைக் கையாளும் ஆற்றல் இலங்கைக்கு உண்டெனக் கூறினார்.
இபோலா வைரஸ் முதலில் கொங்கோவில் 1976 இல் காணப்பட்டது. மரணத்தைத் தரவல்ல இந்நோய் தற்போது லைபீரியா, சியாரா லியோன், கினா பிஸே ஆகிய நாடுகளுக்கு பரவிவிட்டது. இந்நாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவது மிகக்குறைவு என்பதால் இலங்கையில் இந்நோய் பரவும் வாய்ப்பு மிக மிகக் குறைவு என டாக்டர் பலிகவதன கூறினார்.
ஓர் இபோலா நோயாளி காணப்படின் முதலில் அவரை அருகிலுள்ள வைத்தியசாலைக்குக் கொண்டு செல்ல வேண்டும். அங்கு அவர் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
இபோலா வைரஸ் வளியால் பரவுவதில்லை. இது இரத்தம் மற்றும் உடலுறவு மூலமே பரவுகின்றது. எனவே இபோலா நோயைத் தடுப்பது இலகுவானது என அவர் கூறினார்.