இன்றைய தலைமுறையினரின் அன்றாட உணவில் கோழி இறைச்சி இன்றியமையாததாகிவிட்டது. ஆரம்ப காலத்தில் கோழிக்கறிக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த கோழிகள் மாறிவரும் உலகிற்கேற்ப பல வடிவங்களில் பல சுவைகளில் மாற்றம் பெற்றன. கோழிக்கறி பிரியர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவே தினமும் கோடிக்கணக்கான கோழிகள் கொல்லப்படுகின்றன.
எந்த விருந்துகள், விழாக்கள் என்றாலும் அங்கு “கோழி’ என்பது தவிர்க்க முடியாததாக இருப்பதுபோல் இக்கோழிகள் மனிதனுக்கு ஏற்படுத்தும் ஆபத்துகளும் தவிர்க்க முடியாதவையாகிவிட்டன. மனிதர்கள்தான் இதுவரையில் தமது உணவுத் தேவைக்காகக் கோழிகளைக் கொன்றார்கள்.
ஆனால் தற்போது கோழிகள் மனிதர்களைக் கொல்கின்றன என்பதை உங்களால் நம்ப முடிகின்றதா? ஆனால் நம்பித்தான் ஆகவேண்டும். நீங்கள் கோழி உணவுப் பிரியர்கள் என்றால் நீங்களும் கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். அது எப்படிஎன்று பார்ப்போம்.
இந்தியாவிலுள்ள விஞ்ஞானம் மற்றும் சுற்றுச்சூழல் மையம் (சி.எஸ்.இ.) நடத்திய ஆய்வில் கோழி இறைச்சியில் அதிக அளவு அன்டிபயோடிக் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எந்தவிதமான வழிகாட்டுதலும் இல்லாத நிலையில், கறிக்கோழிகளுக்கு அதிக அளவு அன்ட்டிபயோடிக் கொடுக்கப்படுகிறது.
இதனால் கோழிகளுக்கு வரும் குணப்படுத்தக்கூடிய நோயையும் குணப்படுத்த முடியாமல் போவதோடு, இறைச்சியைச் சாப்பிடும் மனிதர்களுக்கும் நோய்க்கூறுகள் தோன்றுகின்றன என்று அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
சாதாரண காய்ச்சல் உள்ளிட்ட தினசரி நோய்கள் பலவற்றுக்கு பல்வேறு அன்டிபயோட்டிக்குகள் பயன்படுகின்றன. ஆனால், கறிக்கோழியில் அதிகம் அன்டிபயோடிக் செலுத்தப்படுவதால், அதனை உட்கொள்ளும் மனிதர்களுக்கும் அன்ட்டிபயோட்டிக்கினால் குணப்படுத்தக் கூடிய நோய்களையும் குணப்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. காரணம் அந்த மருந்துகள் நம் உடலில் அளவுக்கு அதிகமாகி, வேலை செய்யாமல் விரயமாகிவிடுகின்றன.
இந்தியாவில் நடத்தப்பட்ட இந்த மிகப் பெரிய ஆய்வில் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட கோழிக்கறியில் 40 வீத மாதிரிகளில் அளவுக்கு அதிகமான அன்ட்டிபயோட்டிக் மருந்துகள் கலந்திருப்பது தெரியவந்துள்ளது. விஞ்ஞானம் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் மாசுக் கண்காணிப்பு பரிசோதனைச் சாலையின் தலைமை இயக்குனர் சுனிதா நரைன் கூறும் போது, “அன்ட்டி பயோடிக் பயன்பாடுகள் மனித, மருத்துவப் பயன்பாடுகளையும் மீறிச் சென்றுள்ளன.
கால்நடை வளர்ப்பு தொழிற்துறையினர் கோழிகள் எடை கூடுவதற்கும், வேகமாக வளர்வதற்கும் அன்ட்டிபயோடிக் மருந்துகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். இது தவறான அணுகுமுறை’ என்று அவர் எச்சரித்துள்ளார்.
பரிசோதனை முடிவுகள்
டெல்லியிலிருந்து 70 சிக்கன் மாதிரிகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. கோழிகளின் ஈரல், தசை மற்றும் சிறுநீரகம் என்பன பரிசோதனை செய்யப்பட்டன. பொதுவாக கோழி வளர்ப்பில் 6 அன்ட்டி பயோடிக் மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அக்சிடெட்ரா சைக்ளின், குளோர்டெட்ராசைக்ளின், டெட்ராசைக்ளின் வகையறாவான டொக்சிசைக்ளின், என்ரோபிளோக்சசின், சிப்பேராபிளோக்சசின், நியோமைசின் ஆகியவை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
மேற்கூறிய அன்டிபயோடிக் மருந்துக்களில் 5 வகை மருந்துகள் அனைத்து சிக்கன்களிலும் காணப்பட்டன. கிலோவுக்கு 3.37 131.75 மைக்ரோகிராம் அன்ட்டிபயோடிக் மருந்துகளின் படிவுகள் கோழிக் கறியில் இருப்பது தெரியவந்தது.
குர்கவான் பகுதியிலிருந்து பெற்ற கோழிக்கறி மாதிரியில் ஒன்றுக்கும் மேற்பட்ட (அக்சிடெட்ராசைக்ளின், டொக்சிசைக்ளின், என்ரோபிளோக்சசின்) மருந்துகளின் படிவுகள் அதிக அளவில் காணப்பட்டுள்ளன.
கோழிகளின் வாழ்நாளில் 35 முதல் 42 நாட்களுக்குள் அன்ட்டிபயோடிக் மருந்துகள் காரணமில்லாமல் வெறும் எடையை அதிகரிக்கவும் வளர்ச்சியைத் துரிதப்படுத்துவதற்காகவும் மட்டுமே பயன்படுத்தப்படுவதாக இந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த ஆய்வு ஒரு சிறு அளவை மட்டுமே காண்பித்துள்ளது. இன்னும் அதிகமான அன்டிபயோட்டிக் மருந்துகள் முறையற்றுப் பயன்படுத்தப்படுகின்றன என்று இந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் கோழிக்கறி சாப்பிடுபவர்களுக்கு அன்ட்டிபயோடிக் மருந்துகளையும் தடுக்கும் பாக்டீரியாக்களின் ஆதிக்கம் ஏற்படும் அபாயம் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.
இதனையும் சி.எஸ்.இ. ஆய்வாளர்கள் ஆய்வுபூர்வமாக நிரூபித்துள்ளனர். 2002 ஆம் ஆண்டிலிருந்து 2013 ஆம் ஆண்டுவரை தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் பெரும்பாலான நோயாளிகளுக்கு சிப்ரோபிளோக்சசின், ஆக்சிடெட்ராசைக்ளின், டொக்சிசைக்ளின் போன்ற ஆன்ட்டிபயோடிக் மருந்துகள் வேலை செய்யாதது கண்டுபிடிக்கப்பட்டது.
சிப்ரோபிளோக்சசின் என்ற அன்ட்டிபயோடிக் மூக்கு முதல் பாதம் வரையிலான அனைத்து நோய்களையும் எதிர்க்கும் மருந்தாகும். இதன் பலனை மனித உடல் இழக்கும்போது டைபொய்ட் உள்ளிட்ட பிற கிருமித் தொற்று நோய்களுக்கு சிகிச்சை அளிப்பது பெரும் சவாலாக மாறிவிடும். உண்மையில் இந்தியாவில் இது அதிகரித்திருப்பதாக சி.எஸ்.இ. எச்சரித்துள்ளது.
எனவே இறைச்சி உற்பத்தித் தொழிற்துறையில் தாறுமாறாக அன்ட்டி பயோடிக் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க கடும் சட்டங்களையும் கண்காணிப்பு முறைகளையும் கொண்டு வரவேண்டும் என்று சி.எஸ்.இ. தெரிவித்துள்ளது.