எதிர்கால சந்ததியினர் தொழில்நுட்ப ரீதியான பாடங்களை கற்க முன்வரவேண்டும் என க.பொ.த உயர்தரத்தில் உயிர்முறை தொழில்நுட்பவியல் பாடத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவன் கணேசமூர்த்தி துதிசான் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு – படுவான்கரை பகுதியில் இருந்து உயிர்முறை தொழில்நுட்பவியல் பாடத்தில் முதன்முறையாக மாவட்டத்தில் முதல் இடத்தினை துதிசான் பெற்றுக்கொண்டுள்ளார்.
மட்டக்களப்பு – போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட திருப்பழுகாமம் விபுலானந்த புரத்தினை சேர்ந்த கணேசமூர்த்தி துதிசான் மூன்று பாடங்களில் B சித்திகளைப் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் இடத்தினைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
தும்பங்கேணி கண்ணகி வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியை கற்ற இவர், பட்டிருப்பு தேசிய பாடசாலையில் சாதாரண தரம் கற்றதுடன் களுதாவளை மத்திய மகா வித்தியாலயத்தில் உயர் கல்வியை கற்று இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் இடத்தினைப்பெற்று சாதனை படைத்துள்ளார்.
சாதாரண குடும்பத்தில் பிறந்து மிகவும் கஸ்டங்களின் மத்தியில் கல்வியை தொடர்ந்த அவர், எதிர் காலத்தில் தமது சமூகத்திற்கு சிறந்த கல்வியினையும் சேவையினையும் வழங்கும் வகையில் ஒரு விரிவுரையாளராக வருவதே தனது நோக்கம் எனவும் தெரிவித்தார்.
தான் எவ்வளவோ கஸ்டங்களின் மத்தியில் கல்வியை தொடர்ந்த போதும் எனது இலக்கு கல்வியின் உச்ச நிலையை அடைய வேண்டும் என்பதாகவே இருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.