இரண்டு ஆண்கள் செய்த மோசடி செயல்: உயிரை விட்ட 16 வயது மாணவி

இந்தியாவில் பண மோசடியால் 16 வயது பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லியை சேர்ந்தவர் நிஷா (16). பத்தாம் வகுப்பு பள்ளி மாணவியான இவரின் தந்தை ரஞ்சித்தாசுக்கு சமீபத்தில் அறுவை சிகிச்சை நடந்த நிலையில், அவர் வேலைக்கு செல்லவில்லை.

இதனால் குடும்பம் பண கஷ்டத்தில் தவித்து வந்தது. இந்நிலையில் தன்னுடைய ஏ.டி.எம் கார்டை நிஷாவிடம் கொடுத்த அவர் தந்தை தாஸ், 6000 பணத்தை எடுத்து வர கூறியுள்ளார்.

நிஷாவும் ஏ.டி.எம் மையத்துக்கு சென்று 6000 பணத்தை எடுத்து வந்துள்ளார்.

அப்போது மையத்தின் வாசலில் நின்ற இரண்டு ஆண்கள் நிஷாவிடம் பணம் எடுத்ததற்கான ரசீதை எடுத்தீர்களா என கேட்டுள்ளனர்.

இதற்கு நிஷா இல்லை என கூறியதோடு, தனது தந்தை போனில் மெசேஜ் வரும் என கூறினார்.

ஆனால் அதில் நம்பகத்தன்மை இல்லை என நிஷாவிடம் கூறிய இருவரும் மீண்டும் அவர் ஏ.டி.எம் கார்டை உபயோகப்படுத்த வைத்துள்ளனர்.

பின்னர் நிஷா வீட்டுக்கு வந்த போது தாஸ் செல்போனில் ரூபாய் 29000 எடுத்ததற்கான மெசேஜ் வந்ததை பார்த்து அதிர்ந்தார்.

அப்போது தான் நிஷா அந்த இருவரால் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.

இது குறித்து நிஷா பொலிசில் புகார் அளித்த நிலையில் தன்னால் பணம் போய்விட்டதே என மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.

இதன் காரணமாக இரு தினங்களுக்கு முன்னர் நிஷா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் நிஷாவின் சடலத்தை கைப்பற்றியுள்ளனர்.

மேலும் ஏடிஎம் அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து இருவரையும் பொலிசார் தேடி வருகிறார்கள்