சமகாலத்தில் விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படும் மஞ்சள் தூளில் பல்வேறு கலப்படங்கள் உள்ளதாக பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் பெற்று கொள்ளும் மஞ்சள் தூளில் பல்வேறு கலப்படம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலுக்கமைய, விற்பனை நிலையங்களை திடீர் சோதனையிடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
அவ்வாறு வர்த்தக நிலையங்களில் கிடைத்த மஞ்சள் மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகார சபையின் இயக்குனர் அசேல பண்டார தெரிவித்துள்ளார்.
நுகர்வோர் அதிகார சபையினால் மேற்கொள்ளப்படுகின்ற ஏனைய சுற்றிவளைப்புகள் பொதுவான முறையில் மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.
மோசடியான வர்த்தகர்கள் தொடர்பான தகவல் வழங்குவதற்காக நுகர்வோர் விவகார அதிகார சபையினால் தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 1977 என்ற இலக்கத்தின் ஊடாக பொதுமக்கள் முறைப்பாடுகளை வழங்க முடியும்.
கொழும்பு யோன் வீதிக்கு அருகில் இடம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 50 லட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதிக விலையின் கீழ் இந்த மஞ்சளை விற்பனை செய்வதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்தாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் அதிகளவானோர் உணவில் மஞ்சள் சேர்த்துக் கொள்வதனால் ஆபத்துக்கள் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.