இலங்கைச் சிறுமிக்கு புதுவாழ்வளித்த கேரளப் பெண்!!

கேரளாவை சேர்ந்த பெண் மருத்துவர் தனது குருத்தணுவை (stem cell) விசித்தர நோயால் பாதிக்கப்பட்ட இலங்கை சிறுமிக்கு தானமாக அளித்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையை சேர்ந்தவர் ஸ்ரீமாலி பாலசூர்யா (6). இவர் இரண்டு மாத குழந்தையாக இருக்கும் போதே thalassemia என்னும் இரத்த அழிவு சோகை நோய் அவருக்கு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து பாலசூர்யாவுக்கு அவர் பெற்றோர் இலங்கை மற்றும் பெங்களூரில் சிகிச்சையளித்து வந்தனர்.சிறுமி உடலுக்கு குருத்தணுவை செலுத்தினால் தான் அவரால் ஆரோக்கியமாக வாழ முடியும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில் கேரளாவை சேர்ந்த பெண் மருத்துவரான கண்மணி கண்ணன் தனது குருத்தணுவை பாலசூர்யாவுக்கு தானமாக வழங்கிய நிலையில் சிகிச்சைக்கு பின்னர் தற்போது பாலசூர்யா ஆரோக்கியமாக உள்ளார்.இது சம்மந்தமாக கொச்சியில் உள்ள அமிர்தா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் என்ற மருத்துவ நிறுவனத்தில் நேற்று நிகழ்ச்சி நடந்தது.

இதில் பாலசூர்யா, அவர் பெற்றோர், கண்மணி மற்றும் இதர மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

எல்லோருமே அங்கு நெகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். அப்போது கண்மணிக்கும், பாலசூர்யாவுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்களுக்கும் சிறுமியின் பெற்றோர் நன்றி தெரிவித்தனர்.

கண்மணி கூறுகையில், கடந்த 2013லேயே குருத்தணுவை தானம் செய்வதற்காக பதிவு செய்திருந்தேன்.

கடவுள் சரியான நேரத்தில் இதற்கான நபரை காட்டுவார் என நினைத்திருந்த நேரத்தில் தற்போது அது நிறைவேறியுள்ளது என கூறியுள்ளார்.