14 மாதத்தில் 8 குழந்தைகளை பெற்ற 65 வயது மூதாட்டி… விசாரணையில் கிடைத்த அதிர்ச்சி தகவல்!

பீகார் மாநிலம் முசாஃபர்பூர் மாவட்டத்தில் உள்ள முசாஹரி பகுதியை சேர்ந்தவர் லீலா தேவி(65). இவர் கடந்த 14 மாதங்களின் இடைவெளியில் மொத்தம் 8 பெண் குழந்தைகளை அவர் பெற்றெடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அதே போல, சோனியா தேவி என்ற மற்றொரு மூதாட்டியும், கடந்த ஒன்பது மாதங்களில் ஐந்து பெண் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளதாகவும் மருத்துவமனை ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், மூதாட்டிகள் எப்படி கர்ப்பமடைய முடியும், அதுவும் சில மாதங்கள் இடைவெளியில் எப்படி இவ்வளவு பெண் குழந்தைகளை பெற்றிருக்க முடியும் என மருத்துவ துறை உயர் அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக, நடைபெற்ற தீவிர விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.

அதில், பெண் குழந்தைகளை பெற்றெடுக்கும் தாய்மார்களுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகையில் முறைகேடு செய்யும் நோக்கில் மருத்துவமனை அதிகாரிகள், மூதாட்டிகள் பெண் குழந்தைகள் பெற்றதாக போலியான ஆவணங்களை குறிப்பிட்டு, அவர்களின் வங்கி கணக்கிலும் பணம் செலுத்தியுள்ள தகவல் கிடைத்துள்ளது.

மேலும், இந்த முறைகேடு குறித்து உயர்நிலை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், தவறு செய்த அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என முசாஃபர்பூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

பெண் குழந்தைகளை பெற்றெடுக்கும் தாய்மார்களுக்கு தேசிய சுகாதார திட்டத்தின் கீழ், மத்திய, மாநில அரசுகள் 1,400 ரூபாய் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.