காரை தடுத்து நிறுத்திய கோவத்தில், காவலாளியை சரமாரியாக செருப்பால் அடித்த பெண்ணின் காணொளி சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
முகநூல் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் தற்போது சிறிய காணொளி ஒன்று வேகமாக பரவி வருகிறது. வெள்ளை நிற ஃபோக்ஸ்வேகன் போலோ காரில் வந்த பெண் ஒருவர், அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் முன் பகுதியில், அதன் காவலாளியை சரமாரியாக தாக்கும் காட்சிகள் அந்த காணொளியில் இடம்பெற்றுள்ளன.
காவலாளியின் அறைக்கு அருகே காரை நிறுத்தி விட்டு இறங்கி வந்த அந்த பெண், காவலாளியை தாக்கும் காட்சிகளை அந்த காணொளியில் தெளிவாக காண முடிகிறது. ஒரு சில வினாடிகள் ஏதோ பேசிய அவர், அதன்பின் காவலாளியை சரமாரியாக தாக்க தொடங்கி விட்டார். இதனால் நிலைகுலைந்த காவலாளி, அடியில் இருந்து தப்பிக்கும் வகையில் தன் கைகளை தலையின் மீது வைத்து கொண்டார்.
இதன் உச்சகட்டமாக ஒரு சில வினாடிகளுக்கு பின்பு தனது காலில் அணிந்திருந்த செருப்பை கழற்றிய அந்த பெண், அதைக்கொண்டும் காவலாளியை தாக்கினார்.
அந்த பெண்ணை தடுக்கவோ அல்லது காவலாளியை காப்பாற்றவோ உதவிக்கு யாரும் வரவில்லை. பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் ஐதராபாத் நகரில் நடைபெற்றுள்ளது. குறித்த தாக்குதலுக்கு காரணம் என்ன என்பது இன்னும் சரியாக வெளிவரவில்லை.