ஆளுநர் அலுவலகத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஊடகவியலாளரை சந்தித்த பிறகு, அவர் அருகே ஒரு வார பத்திரிகையின் மூத்த ஊடகவியலாளர் உள்பட சில பெண் ஊடகவியலாளர்கள் அவரிடம் சில கேள்விகளை கேட்க முயன்றனர். அப்போது, ஆளுநர் அந்த கேள்விகளுக்கு பதில் அளிக்காமல், அங்கு நின்றிருந்த மூத்த ஊடகவியலாளர் கன்னத்தை சிரித்தபடி, கையால் தட்டிவிட்டு சென்றார்.
இதை மூத்த ஊடகவியலாளர் கண்டிக்கும் வகையில் சமூக வலைதளத்தில் கருத்து ஒன்றை வெளியிட்டார். அதில், ‘கவர்னர் தன்னை தாத்தாவாக நினைத்து என் கன்னத்தை தட்டி இருக்கலாம். ஆனால் நான் இதை ஏற்கவில்லை. என் முகத்தை நான் பலமுறை கழுவினால் கூட இந்த தாக்கத்தில் இருந்து என்னால் மீள முடியவில்லை’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. எம்.பி. கனிமொழி ஆகியோரும் ஆளுநரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் மீண்டும் ஒரு சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.