உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு அழைத்துசெல்லாத கணவன்; குழந்தையுடன் சேர்ந்து மனைவி எடுத்த சோக முடிவு

பொள்ளாச்சி அருகே உள்ள நெகமம், தாளக்கரை பகுதியைச் சேர்ந்தவர் கதிரேசன். இவரது மனைவி தாமரைச்செல்வி. கூலித்தொழிலாளியான இவருக்கு திருமணமாகி இரண்டரை ஆண்டுகள் ஆனநிலையில் ஒன்றரை வயதில் ஒருபெண் குழந்தை இருந்தது.

இதையடுத்து, தாமரைச் செல்வியின் உறவினருக்கு நேற்று திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டும் என்று தனது கணவரிடம் கூறியுள்ளார் தாமரைச்செல்வி.

அதற்கு கதிரேசன், கொரோனா நோய் பரவி வரும் நிலையில், குழந்தையுடன் திருமண வரவேற்புக்கு செல்ல வேண்டாம் என கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து, நேற்று மாலை கதிரேசன் அருகே உள்ள கோழிப்பண்ணைக்கு வேலைக்காக சென்றுள்ளார். வேலையை முடிந்து இன்று காலை வீடு திரும்பியவர் கதவை தட்டியுள்ளார்.

கதவை திறக்காததால், வீட்டின் மேற்கூரையை பிரித்து பார்த்தபோது, அவரது மனைவி மற்றும் குழந்தை தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தனர்.

இதைக்கண்டு மனமுடைந்து போன கதிரேசன் கதறி அழுதுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நெகமம் போலீசார் தமிழ்ச்செல்வி மற்றும் அவரது ஒன்றரை வயது குழந்தையின் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.