நான் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பல: வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு ஆசிரியை தற்கொலை

தான் இனிமேலும் யாருக்கும் பாரமாக இருக்கப் போவதில்லை என கூறிவிட்டு இளம் நடன ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தந்தை பெரியார் நகர் பகுதியில் வாழ்ந்து வருபவர் காண்டீபன்.

இவர் தீயணைப்பு துறையிலும் அவரின் மனைவி புவனேஸ்வரி (வயது 32) தேவகோட்டை அருகே உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் ஆசிரியராகவும் வேலை பார்த்து வருகின்றனர், தேவகோட்டையில் சொந்தமாக நடனப் பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் நேற்று புவனேஸ்வரி, இதுவரை ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி, இனிமேலும் நான் இருக்கப் போவதில்லை என வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்திருந்தார்.

இதனால் சந்தேகமடைந்த புவனேஸ்வரியின் மாணவி அவரது கணவரிடம் கூற, மனைவியை தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார்.

ஆனால் முடியாமல் போகவே உடனடியாக பொலிசுக்கு தகவல் அளித்தார், இதனையடுத்து புவனேஸ்வரியின் செல்போன் எண்ணைக் கொண்டு டவரை தேடியதில் திருச்சி பைபாஸ் காட்டுப்பகுதியில் இருப்பது தெரியவந்தது.

தொடர்ந்து பொலிஸ் அதிகாரிகள் சோதனையிட்டதில், காட்டுக்குள் உள்ள மரத்தில் சடலமாக தொங்கியுள்ளார் புவனேஸ்வரி.

இதனையடுத்து சடலத்தை மீட்ட அதிகாரிகள், விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.