போர்வையை போர்த்திக்கொண்டு இளம்பெண் ஒருவர் பிளேடால் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் லத்தேரி அடுத்த புதூர் மேடு பகுதியை சேர்ந்தவர் விவசாயியான சாமிநாதன். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகளான கல்பனா கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
இவருக்கு திருமணம் செய்வதற்கு வீட்டில் வங்கியில் வேலை செய்யும் மாப்பிள்ளையை பார்த்துள்ளனர். கல்பனாவை பார்க்கவந்த மாப்பிள்ளைக்கு அவரை பிடித்துவிட்டதாம். ஆனால் மாப்பிள்ளையின் வயது 33 என்பதால் கல்பனா வேண்டாம் என்று கூறியுள்ளார்.
ஆனால் பெற்றோர் குறித்த மாப்பிள்ளையைத் தான் திருமணம் செய்ய வேண்டும் என வற்புறுத்தியுள்ளனர். இந்நிலையில் நேற்றிரவு அனைவரும் தூங்கிக்கொண்டிருந்த நேரத்தில் தீடீரென அவரது அலறல் சத்தம் கேட்டுள்ளனர்.
உடனே பெற்றோர்கள் ஓடிவந்து பார்த்த போது போர்வையால் உடலை மூடிக் கொண்டு தன் கழுத்தை பிளேடால் வெட்டிக் கொண்டிருந்ததை அவதானித்து பதறிய நிலையில் அவரை மருத்துவமனைக்கு தூக்கிச்சென்றுள்ளனர்.
ஆனால் கல்பனா ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.