லொலிவூட் என அழைக்கப்படும் பாகிஸ்தானிய திரைப்படத்துறையில் பிரபலமானவர் நடிகை மீரா. 40 வயதான இவரின் உண்மையான பெயர் இர்திஸா ரூபாப் ஆகும்.
இந்தியாவின் பொலிவூட் திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். அரசியலில் ஈடுபடும் ஆர்வத்தையும் முன்னர் வெளிப்படுத்தியிருந்தவர் நடிகை மீரா.
வணிக ரீதியில் வெற்றிபெற்ற பல படங்களில் நடித்த நடிகை மீரா பல விருதுகளையும் வென்றவர்.
இந்நிலையில், தான் நடிகை மீராவின் கணவர் என வர்த்தகர் கூற ஆரம்பித்ததால் அதை நிராகரித்து, சட்ட நடவடிக்கைகளில் மீரா ஈடுபட்டுள்ளார்.
பாகிஸ்தானின் பைஸலாபாத் நகரைச் சேர்ந்த வர்த்தகரான அதீக் உர் ரெஹ்மான் எனும் வர்த்தகரே தான் மீராவின் கணவர் என்கிறார்.
தனக்கும் நடிகை மீராவுக்கும் 2007 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றதாக 2009 ஆம் ஆண்டு அதீக் உர் ரெஹ்மான் செய்தியாளர்களிடம் கூறினார்.
தனது கணவர் என தன்னை பகிரங்கமாக ஏற்றுக்கொள்வதற்கு மீரா தயங்குவதாகவும், தனது ரசிகர்களிடம் தான் இன்னும் திருமணமாகாதவர் எனக் கூறிவருவதாகவும் அதீக் உர் ரெஹ்மான் கூறினார்.
தனக்கும் நடிகை மீராவுக்கும் திருமணம் நடைபெற்றதை உறுதிப்படுத்துவதற்காக திருமணச் சான்றிதழையும் அதீக் உர் ரெஹ்மான் சமர்ப்பித்ததுடன், மீராவுக்கு எதிராக நீதிமன்றத்தில் பல வழக்குகளையும் தாக்கல் செய்தார்.
நடிகை மீரா தனது மனைவி என்பதை உறுதிப்படுத்துவதற்காக மீராவை மருத்தவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும், தன்னை விவாகரத்துச் செய்யாமல் வேறு யாரையும் திருமணம் செய்ய மீராவை அனுமதிக்கக்
கூடாது, தனது வீடொன்றிலேயே மீரா வசிக்க வேண்டும், அவரை வெளிநாடு செல்ல அனுமதிக்கக் கூடாது எனவும் அதீக் உர் ரெஹ்மான் கோரினார்.
மீராவை கன்னித்தன்மை சோதனைக்குட்படுத்த வேண்டும் எனவும் அதீக் உர் ரெஹ்மான் கோரினார். ஆனால், லாகூர் மேல் நீதிமன்றம் அக் கோரிக்கையை நிராகரித்தது. பொதுவாக, பாலியல் வல்லுறவு போன்ற வழக்குகளிலேயே இத்தகைய சோதனை நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
தான், அதீக் உர் ரெஹ்மானின் மனைவியல்ல எனவும் தான் எவரையும் திருமணம் செய்யவில்லை எனவும் கூறும் மீரா, அதீக் உர் ரெஹ்மானுக்கு எதிராக 2010 ஆம் ஆண்டு வழக்கொன்றை தாக்கல் செய்தார்.
அதீக் உர் ரெஹ்மான் பிரபல்யமடைவதற்கு அவா கொண்டவர் என மீரா கூறுகிறார். நிகழ்ச்சி ஊக்குவிப்பாளரான ரெஹ்மான், நண்பர் ஒருவர் மூலம் தனக்கு அறிமுகமானதாகவும், சில இசை நிகழ்ச்சிகள், சுற்றுலாக்களில் அவருடன் இணைந்து செயற்பட்டதாகவும் மீரா தெரிவித்துள்ளார்.
‘அவர் போலி புகைப்படங்களைக் காட்டி என்னைத் திருமணம் செய்ததாகக் கூறுகிறார். என்னை தனது மனைவி என அழைக்க எப்படி அனுமதிக்க முடியும்?’ என கேள்வியெழுப்புகிறார் மீரா.
‘நான் ஒரு நட்சத்திரம், அவ்வளவு சாதாரணமான வகையில் எனது திருமணம் நடைபெற மாட்டாது. ஒரு அறை க்குள்ளா நான் திருமணம் செய்திருப்பேன்?’ என்கிறார் அவர்.
நடிகை மீரா இவ்வாறு கூறும் நிலையில், அவரும் அதீக் உர் ரெஹ்மானும் கடற்கரையில் நெருக்கமாக காணப்படும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.
இந்த வழக்கு தாமதமடைவதன் காரணமாக தான் திருமணம் செய்துகொள்வதற்கு தடங்கல் ஏற்பட்டுள்ளதாக மீரா தெரிவித்தார்.
இந்நிலையில், வேறு எவரையும் மீரா திருமணம் செய்துகொள்ளக் கூடாது எனும் ரெஹ்மானின் கோரிக்கையை அண்மையில் லாகூர் நீதிமன்றமொன்று நிராகரித்தது.
ரெஹ்மான் சமர்ப்பித்த திருமண சான்றிதழ் உண்மையானதா இல்லையா என இன்னும் தீர்மானிக்கப்பட வில்லை என நீதிபதி பாபர் நதீம் தெரிவித்தார்.
எனினும், மீரா திருமணமானவர் என அதீக் உர் ரெஹ்மான் நிரூபித்தால் சட்ட ரீதியான பின்விளைவுகளை மீரா எதிர்கொள்ள வேண்டும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.