பகவான் சாயிபாபாவுக்கு, நாம் தரிசிப்பது போலான உருவம் மட்டுமே என்று நினைத்துவிடாதீர்கள். நாம் எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் பாபாவைப் பார்க்கமுடியும். அப்படி வந்து பாபா தரிசனம் தருவார்; அருள் மழை பொழிவார். இவற்றுக்குத் தேவை உறுதியான நம்பிக்கை, நிலையான பக்தி!
’என்னை எந்த உருவத்தில் நீங்கள் பார்க்க விரும்புகிறீர்களோ, அதே உருவத்தில் உங்களுக்குக் காட்சி தருவேன். யாரெல்லாம் என்னை அடைக்கலமாக அடைகின்றார்களோ அவர்களின் பாரத்தை நான் சுமக்கிறேன்’’ என்று அருளியுள்ளார் சாயிபாபா.
பாபா என்பவர் ஞான குரு. நம் கண் முன்னே நடமாடிய தெய்வம். இன்றைக்கும் சுட்சுமமாக பல ரூபங்களில் நமக்கு முன்னே நடமாடி தரிசனம் தந்துகொண்டிருக்கிறார் சாயிபாபா. அவரைச் சரணடவதே, அவரே நமக்கு எல்லாம் என்று பக்தி செலுத்துவதுதான் நாம் செய்யவேண்டிய வழிபாடு.
’’எவரொருவர் என்னுடைய திருவடிகளை சரணடைகின்றார்களோ அவர்களின் அத்தனை எண்ணங்களையும் ஈடேற்றித் தருவதை விட எனக்கு வேறு என்ன வேலை இருக்கிறது?
தன் உடல், மனம், தனம், செய்கைகள் என அனைத்தையும் எனக்கு அர்ப்பணித்து, என்னை தியானம் செய்கிறவர்கள் எவரோ, எவரெல்ல்லாம் அவர்களின் துன்பங்களை என்னிடம்கொடுப்பதற்குத் தயாராக இருக்கிறார்களோ, யாரெல்லாம் சாயியான என்னுடைய நாமத்தை தினமும் ஜபிக்கிறார்களோ, அவர்கள் சகல பாவங்களில் இருந்தும் விடுபட்டு என்னை அடைகிறார்கள்.
அன்பர்களே… நீங்கள் வேறு நான் வேறு அல்ல. உங்களை எல்லாவிதமாகவும் உயர்த்துவேன். கலங்காதீர்கள். நீங்கள் என்னைப் பார்த்தால் நானும் உங்களைப் பார்ப்பேன் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்’’என்கிறார் சாயிபாபா.
பாபாவை மனமுருகி வேண்டுங்கள். ‘சாயிராம்… சாயிராம்… சாயிராம்…’ என்று ஜபித்துக்கொண்டே உங்கள் கோரிக்கைகளையும் கவலைகளையும் வேதனைகளையும் சொல்லி முறையிடுங்கள். ஏதேனும் ஒரு ரூபத்தில், ஏதேனும் ஒரு வடிவத்தில் உங்களிடம் வருவார் சாயிபாபா. உங்களுக்கு சகல விதமான யோகங்களைத் தருவார் பாபா. .
பாபாவின் நாமம் சொல்லுங்கள். பாபாவை உறுதியாகப் பற்றிக்கொள்ளுங்கள். நம்பியவர்களை ஒருபோதும் கைவிடமாட்டார் பாபா.