கர்நாடகவில் பேய் பிடித்துள்ளதாக கூறி பூர்விகா என்ற 3 வயது குழந்தையை சாமியார் ஒருவர் அடித்ததினால் பரிதாபமாக உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகத்தில் சித்ரதுர்கா மாவட்டம் ஒலல்கெரே தாலுகா அஜ்ஜிகாட்டனஹள்ளி கிராமத்தில் பிரவீன் – ஷியாமாலா தம்பதியர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 3 வயதில் பூர்விகா என்ற மகள் இருந்தாள்.
கடந்த மூன்று நாட்களாக சாப்பிடாமல் பூர்விகா இருந்ததால் அச்சமடைந்த பெற்றோர் மருத்துவமனைக்குச் செல்லாமல், அங்கிருந்த சவுடம்மன் கோவில் பூசாரியான ராகேஷ்(19) என்பவரிடம் அழைத்துச் சென்றுள்ளார்.
சாமியார் ராகேஷ் குழந்தைக்கு பேய் பிடித்து இருப்பதாகவும், அதற்கு பூஜை செய்தால் பேயை விரட்டிவிடலாம் என தெரிவித்திருக்கிறார். இதற்கு சம்மதித்த பெற்றோர் வீட்டில் அந்த சாமியாரை வைத்து சிறப்பு பூஜைக்கும் ஏற்பாடு செய்துள்ளனர்.
அத்தருணத்தில் பேய் ஓட்டுவதாக கூறி குழந்தையை பிரம்பால் சரமாரியாக அடித்துள்ளார். இதனால் திடீரென்று குழந்தை மயக்கம் போட்டு விழுந்தது. இதையடுத்து குழந்தை பூர்விகாவை, அதன் பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டு ராகேஷ் அங்கிருந்து சென்றுவிட்டார்.
ஆனால் குழந்தைக்கு மயக்கம் தெளியாததால் அச்சமடைந்த பெற்றோர் பின்பு மருத்துவமனைக்கு பதற்றத்தில் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
பின்பு தகவலறிந்த பொலிசார், சாமியார் ராகேஷை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 3 வயது குழந்தைக்கு பேய் ஓட்டுவதாக கூறி சாமியார் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.