ஈழத் தமிழ் மக்கள் அனைத்துலக அரங்குடன் தொடர்பாடலை மேற்கொள்ள தான் அனுசரணைப் பணியை செய்யத் தயார் என்று இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான அனுசரணையாரும் முன்னாள் அரசியல்வாதியுமான எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
தமிழ்மக்கள் வன்முறையற்ற வழியில் தமது அபிலாசைகளை வெளிப்படுத்தினால் அந்த அனுசரணையைத் தான் செய்வதற்குத் தயார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஈழத்தமிழ் மக்கள் தமது அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கு ஒற்றுமைப்பட்ட ஒரு தளத்தில் நிற்கவேண்டியது அவசியமென்றும் அவர் சுட்டிக்காண்பித்துள்ளார்.
எரிக்சொல்ஹெய்ம் மற்றும் பிரான்ஸ் மனித உரிமை மையத்தின் பொதுச்செயலாளர் ச.வி கிருபாகரன் ஆகியோருடன் IBC Tamil ஊடகர் நடேசன் நடத்திய நேர்காணல் நிகழ்வின் போது இந்தக்கருத்தை வெளியிட்டஅவர் சிறிலங்கா அரசாங்கத்துக்கு அழுத்தங்களை வழங்கவேண்டுமானால் இந்த விடயம் முக்கியமானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் உள்ள தமிழ் பிரதிநிதித்துவ அரசியலில் முக்கியபாகத்தை கொண்டுள்ள தமிழ்தேசிய கூட்டமைப்பும ஏனைய தமிழ் கட்சிகளும் இதனைவிட இலங்கை பிரச்சனையில் சற்று வித்தியாசமான பார்வையைக் கொண்டுள்ள புலம்பெயர் தமிழ்சமுகமும் இந்த விடயத்தில் ஒன்றுபட்டு நின்றால் அதன் பெறுபேறு காத்திரமாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனைவிட முஸ்லிம் மக்கள் மற்றும் சிங்கள முற்போக்கு சக்திகளுடனும் தமிழ்மக்கள் அரசியல் தொடர்பாடலை கொண்டிருக்கவேண்டுமெனவும் இவ்வாறான ஒரு புள்ளி உருவாகி ஜனநாயக வழிமுறையில் தமிழ்மக்களின் கோரிக்கை விடுக்கப்பட்டால் அதற்கு மேற்குலகம் உதவும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அத்துடன் தமிழ்மக்கள் வன்முறையற்ற வழியில் தமது அபிலாசைகளை வெளிப்படுத்தினால் அனைத்துலக அரங்குடன் அவர்கள் தொடபாடலை மேற்கொள்ள தான் அனுசரணைப் பணியை செய்யத் தயார் எனவும் எரிக்சொல்ஹெய்ம் சுட்டிக் காட்டியுள்ளார். அத்துடன் இவ்வாறன அனுசரணைபணிக்காக விமர்சனங்கள் முன்வைக்கபடுவதாகவும் அவர் ஒரு கட்டத்தில் குறிப்பிட்டிருந்தார்
சிறிலங்கா அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக பத்து தமிழ் கட்சிகளிள் அழைப்பில் தமிழர்தாயக பகுதிகளில் நேற்று அறவழி இயல்பு வாழ்வு முடக்கப்போராட்டம் நடத்தப்பட்டநிலையில் ஜனநாயக வழிமுறையில் தமிழமக்களின் கோரிக்கை விடுக்கபட்டால் அதற்கு மேற்குலகம் உதவும் என எரிக்சொல்ஹெய் ம் கருத்துத் தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.