லண்டன் பாடசாலை ஒன்றில் அதிர்ச்சி சம்பவம்: அவசரமாக மருத்துவமனைக்கு விரைந்த 13 மாணவர்கள்

வடக்கு லண்டனில் உள்ள பாடசாலை ஒன்றில், இனிப்பு என கருதி மாணவர்கள் சாப்பிட்ட பொருளால் 13 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் பெருநகர காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவிக்கையில், அக்டோபர் 5 ஆம் திகதி காலை சுமார் 11.45 மணியளவில் லண்டன் ஆம்புலன்ஸ் சேவையால் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும்,

ஹைகேட் சாலையில் உள்ள ஒரு பள்ளியில் இனிப்பு என்று சாப்பிட்ட பொருளால் மாணவர்கள் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகக் குறிப்பிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 13 மாணவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், இந்த விவகாரம் தொடர்பில் அவர்கள் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், மாணவர்கள் நிலை அச்சப்படும் வகையில் இல்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் முழு விசாரணை நடௌபெற்று வருவதாகவும், இதுவரை கைது நடவடிக்கை ஏதும் முன்னெடுக்கப்படவில்லை எனவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும், இச்சம்பவத்திற்கு பின்னர் பாடசாலை தொடர்ந்து செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, லண்டன் ஆம்புலன்ஸ் சேவையின் செய்தித் தொடர்பாளர் இந்த விவகாரம் தொடர்பில் தெரிவிக்கையில், ஹைகேட் பகுதியில் அமைந்துள்ள, லா சைன்ட் யூனியன் கத்தோலிக்க பள்ளியில் நடந்த ஒரு சம்பவம் தொடர்பில் இன்று காலை சுமார் 11.44 மணிக்கு தங்களுக்கு அழைப்பு வந்ததாக தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து மருத்துவ உதவிக்குழுவினருடன் 5 ஆம்புலன்ஸ் மற்றும் தேவையான வாகனங்களை அனுப்பி வைத்ததாகவும்,

பாடசாலையில் இருந்து 13 மாணவர்களை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.