பிரித்தானியாவில் தீவிரமடையும் கொரோனா பரவல்! மூன்றடுக்கு ஊரடங்கு அமுல்

பிரித்தானியாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், அங்கு மூன்றடுக்கு ஊடரங்கு அமுல்படுத்தப்படுவதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவி வருகின்றது. குறிப்பாக அண்மைய நாட்களில் நாளொன்றுக்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்படுகின்றனர்.

இதனால் அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையிலேயே, அங்கு மூன்றடுக்கு ஊடரங்கு அமுல்படுத்தப்படுவதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

இதன்படி பிரித்தானியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகள் நடுத்தரம், அதிக அளவு, மிக அதிக அளவு என 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, அவற்றுக்கு ஏற்ற வகையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

நடுத்தர அளவு பகுதிகளில் முடிந்தவரை வீட்டில் இருந்தே வேலை செய்ய மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதிக அளவு பிரிவில் திருமண நிகழ்ச்சி, இறுதி சடங்கு உள்ளிட்டவற்றில் அதிகபட்சமாக 30 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படுகின்றது.

இதனிடையே, மிக அதிக அளவு பிரிவாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வீடுகளில் விருந்தினர்களை தங்க வைக்கவோ அல்லது நண்பர்களின் வீடுகளுக்கு செல்லவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டுப்பாடுகள் நாடு முழுவதும் 6 மாத காலத்துக்கு அமுலில் இருக்குமென்றும் 28 நாட்களுக்கு ஒரு முறை விதிமுறைகள் மறுபரிசீலனை செய்யப்படும் என்றும் பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.