திருச்செந்தூர் திருமுருகனின் கந்த ஷஷ்டி விழாவின் கடைசி நாளில், முருகனடியார்கள், ஒரு வார காலம் அனுஷ்டித்த விரதத்தை, மௌன விரதம் இருந்தே நிறைவு செய்வர். இதன் மூலம், தங்கள் கோரிக்கைகளை சீரிய முறையில் முருகப்பெருமான் நடத்தித் தருவார் என்பது, முருகனடியார்களின் நம்பிக்கை.
மௌன விரதம் என்றால் என்ன?
முதலில் நமக்கு மௌனவிரதம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தாலே, நாம் மனித வாழ்வின் விளக்கத்தை அடையும் நீண்ட பயணத்தில், நம்மை இணைத்துக்கொள்கிறோம் என்றுதானே பொருள்.
மௌனவிரதம் என்பது நம்மை நாம் அமைதியாக மனதை ஒடுக்கி, இறை சிந்தனை அல்லது சிந்தனையை ஒருநிலைப்படுத்துவதாகும். இதனால் என்ன நடக்கும்? அமைதியாக ஓரிடத்தில் தரையில் தர்ப்பை பாய் அல்லது கோரைப்பாய் விரித்து அமர்ந்து, அலைபாயும் மனதை ஒருமுகப்படுத்தி, சிந்திக்கும்போது, தினசரி வாழ்வில் நம்மை பாதிக்கும் அனைத்து செயல்களும் நம்முன் வந்துபோகும். இன்னும் சற்று ஆழமாக சிந்திக்க, அவையெல்லாம், நம்மாலேயே உண்டான பாதிப்புகள் என்பதையும் அறிந்து, அவற்றை எப்படி கடக்கவேண்டும் என்று சிந்திக்க, விடைகள் கிடைக்கும்.
மாதம் ஒரு முறை பழச்சாறு மற்றும் தண்ணீர் மட்டும் உட்கொண்டு, மௌன விரதம் கடைபிடிக்க, மனம் பொலிவாகி, எண்ணங்களும் செயலும், பேச்சும் வளமாகும். நம் பேச்சில் உள்ள உண்மைத்தெளிவு, அடுத்தவரிடம் ஒரு ஈர்ப்பை உண்டாக்கும். இதுவரை, நாம் வாழ பிறரைக்கெடுத்தேனும் வாழலாம் என்ற சுயநல கண்ணோட்டம் மறைந்து, நம்மைப்போலவே அவரும், என்ற சக உயிரை மதிக்கும் மனநிலை உண்டாகும்.