தமிழகத்தில் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையம் அருகே கோலாரம் ஊராட்சி கருக்கம்பாளையம் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் முத்துசாமி. சொந்தமாக லாரி வைத்து ஓட்டி வருகிறார். இவருடைய மனைவி சாந்தி.
இவர்களுடைய மகள் அகல்யா (வயது 17). இவர் கரிச்சிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 முடித்து உள்ளார்.
இந்தநிலையில் நேற்று முத்துசாமி லாரியில் பெங்களூரு சென்று விட்டார். தாய் சாந்தி உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்து கொள்வதற்காக சென்று விட்டதாக கூறப்படுகிறது.
பின்னர் சாந்தி மாலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவின் உள்பக்கம் தாழிட்டு இருந்ததை கண்டு திடுக்கிட்டார்.
இதையடுத்து பின்பக்க கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது படுக்கை அறையில் உள்ள மின்விசிறியின் கொக்கியில் அகல்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்திருப்பதை கண்டு அலறி துடித்தார்.
சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் அகல்யாவின் உடலை கீழே இறக்கினர், தகவல் அறிந்ததும் விரைந்து வந்த போலீஸ் அதிகாரிகள், விசாரணை நடத்துகின்றனர்.
இதற்கிடையே தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக தந்தை முத்துசாமி அளித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.