அமெரிக்காவில் குடியரசுக் கட்சி வேட்பாளரும், தற்போதைய அதிபருமான டொனால்டு டிரம்பை வீழ்த்தி, அதிபர் பதவியை பிடிக்கிறார் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன்.
முக்கிய தேர்தல் களமாக உருவெடுத்த பென்சில்வேனியாவில் அவர் வெற்றியை உறுதி செய்வதாகவும், அதன் மூலம் அதிபர் பதவியை வெல்வதற்குத் தேவையான 270 தேர்தல் சபை வாக்குகளை அவர் வெல்கிறார் என்றும் பிபிசி கணிப்பு கூறுகிறது (புரொஜெக்ஷன் செய்கிறது).
எனினும் பல்வேறு சட்டப் போராட்டங்களின் முடிவுகளே இறுதி முடிவாக இருக்கும்.
அந்நாட்டில் செவ்வாய்க்கிழமை நடந்த வாக்குப் பதிவைத் தொடர்ந்து உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ஆனால், அமெரிக்காவில் ஒரே இரவில் வெற்றி தோல்வி தெரிகிற வழக்கத்துக்கு மாறாக பல நாள்களாக வாக்கு எண்ணிக்கை தொடர்கிறது.
கொரோனா தொற்று காரணமாக மில்லியன் கணக்கான வாக்காளர்கள் அஞ்சல் மூலம் வாக்குகளை செலுத்தியதே வாக்கு எண்ணிக்கையில் ஏற்பட்ட தாமதத்துக்கு காரணம்.
ஏற்றமும் இறக்கமுமாக தொடர்ந்துகொண்டிருந்த வாக்கு எண்ணிக்கை முடிவுகளில் ஒரு கட்டத்தில் பைடன் கை ஓங்கியது. வெற்றி தோல்விகளைத் தீர்மானிக்கும் போர்க்கள மாநிலங்களில் படிப்படியாக முன்னிலை பெறத் தொடங்கினார் பைடன்.
ஏற்கெனவே 253 தேர்தல் சபை வாக்குகளை அவர் கைப்பற்றியிருப்பதாக பிபிசி எதிர்வு கூறியிருந்தது. இந்நிலையில், தற்போது பென்சில்வேனியா மாநிலம் அவர் கைவசமாகியுள்ள நிலையில் கூடுதலாக 20 தேர்தல் சபை வாக்குகள் அவரது கணக்கில சேர்ந்து தற்போதைய நிலையில் அவர் வசம் 273 தேர்தல் சபை வாக்குகள் சேர்ந்துள்ளன. எனவே அதிபர் ஆவதற்கு இது போதுமானது.
ஆனால், தமது தோல்வியை டிரம்ப் ஒப்புக்கொள்ளமாட்டார் என்பதை டிரம்ப் பிரசாரக் குழு குறிப்பாக உணர்த்தியுள்ளது.
அமெரிக்கா ‘ஒன்றுபட்டு, குணப்படுத்திக்கொள்ளவேண்டிய’ நேரம் இது பைடன் கூறியுள்ளார்.
தேர்தல் முடிந்துள்ள நிலையில், கோபத்தையும், ஆவேச உரைகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு ஒரு நாடாக ஒன்றாக சேரவேண்டிய நேரம் இது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வெற்றி தம்மை கௌரவித்திருப்பதாகவும், பணிவுகொள்ள வைத்திருப்பதாகவும் தெரிவித்த அவர், முன்னெப்போதும் இல்லாத தடைகள் ஏற்பட்ட நிலையில் முன்னெப்போதும் இல்லாத அளவில் மக்கள் திரண்டு வாக்களித்திருப்பது, அமெரிக்காவின் இதயத்தின் ஆழத்தில் ஜனநாயகம் துடிக்கிறது என்பதைக் காட்டுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த வெற்றியின் மூலம் 1990க்குப் பிறகு ஒரே ஒருமுறை மட்டும் பதவி வகிக்கிற முதல் அதிபராகிறார் டிரம்ப்.
ஏற்கெனவே எண்ணிக்கைய முடித்துவிட்ட மாநிலங்கள், விஸ்கான்சின் போல எண்ணிக்கை தொடர்கிற மாநிலங்கள் ஆகியவற்றில் இருந்து கிடைத்த அதிகாரபூர்வமற்ற முடிவுகளின் அடிப்படையில் டிரம்பின் அதிபர் பதவி வெற்றியைக் கணிக்கிறது பிபிசி.
பைடனுக்கு வரலாறு காணாத வாக்குகள்
1900ம் ஆண்டுக்குப் பிறகு அதிக சதவீத வாக்காளர்கள் இந்த முறை வாக்களித்துள்ளனர். இதுவரை பைடன் 74 மில்லியன் வாக்குகளைப் பெற்றுள்ளார். இது வரலாற்றில் இதுவரை எந்த அதிபர் தேர்தல் வேட்பாளரும் பெற்றிராத வாக்கு எண்ணிக்கை இது.
மில்லியன் கணக்கான வாக்குகள் எண்ணி முடிக்கப்படாத நிலையிலேயே தேர்தல் நாளன்று இரவே தாம் வெற்றி பெற்றுவிட்டதாக தவறாக கூறினார் அதிபர் டொனால்டு டிரம்ப். பிறகு, தேர்தலில் முறைகேடுகள் நடந்துவிட்டதாக ஆதாரம் ஏதுமில்லாமல் கூறினார் டிரம்ப்.
வெள்ளிக்கிழமை அவரது தேர்தல் குழு பல மாநிலங்களில் பல்வேறு தேர்தல் வழக்குகளை நீதிமன்றங்களில் தொடர்ந்தது. அந்த நிலையில் உரையாற்றிய பைடன் தேர்தல் இன்னும் முடியவில்லை என்று தெரிவித்தார்.
கொரோனா வைரசால் உலகிலேயே அதிக பாதிப்புகளை எதிர்கொண்ட நாடாக அமெரிக்கா ஆன நிலையில், புதிய தொற்றுகளும், மரணங்களும் அதிகரித்துக்கொண்டிருந்தபோது இந்த தேர்தல் நடந்தது. பைடன் அதிபரானால், பொது முடக்கங்களை அறிவிப்பார், இதனால், பொருளாதாரம் பாதிக்கப்படும் எனறு டிரம்ப் வாதிட்டார்.
கோவிட் 19 பரவாமல் தடுப்பதற்குத் தேவையான, போதுமான நடவடிக்கைகளை அதிபர் டிரம்ப் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டினார் ஜோ பைடன்.
8 ஆண்டு காலம் அதிபர் பராக் ஒபாமாவின் துணை அதிபராக தாம் பணியாற்றிய வெள்ளை மாளிகைக்கு தற்போது அதிபராக திரும்பி வரவிருக்கிறார் பைடன்.
78 வயதாகும் பைடன், அமெரிக்க வரலாற்றில் மிகவும் வயதான அதிபராகவும் இருப்பார்.
ஜோ பைடன், அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக ஒரு பெண் துணை அதிபரையும் தம்முடன் வெற்றிப்பாதையில் அழைத்து வந்திருக்கிறார் என்று கூறியுள்ள பிபிசி வட அமெரிக்க செய்தியாளர் அந்தோனி சர்ச்சர், பல்லின பின்புலம் உள்ள அந்தப் பெண்மணி வேறு பலவகைகளில் முதலாவது என்று சொல்லத்தக்க பெருமைகளையும் கொண்டுவருகிறார் என்று கூறியுள்ளார்.
புதிய நிர்வாகத்தை கட்டமைக்கிற கடுமையான பணியை பைடன் இப்போது தொடங்கலாம் என்று கூறியுள்ள சர்ச்சர், மூன்று மாதங்களுக்கு உள்ளாக அவர் ஓர் அமைச்சரவையை அமைக்கவேண்டும், முன்னுரிமை கொள்கைகளை முடிவு செய்யவேண்டும், பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டிருக்கிற, கூர்மையாகப் பிளவுபட்டுள்ள நாட்டை ஆள்வதற்குத் தயாராக வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தமது மூன்றாவது முயற்சியில் அதிபராகும் முயற்சியில் வெற்றி பெறும் பைடன், 50 ஆண்டுகளாக அதிபராகும் கனவைக் கொண்டிருக்கிறார் என்றும் அந்தோனி சர்ச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இப்போது என்ன நடக்கிறது?
வழக்கமாக தோற்கும் வேட்பாளர் தமது தோல்வியை ஒப்புக்கொள்வார். ஆனால், தேர்தல் முடிவுகளை பல முனைகளிலும் சவாலுக்கு உட்படுத்துவது என்று டிரம்ப் தீர்மானித்துள்ளார்.
இன்னும் நிறைவை எட்டாத நான்கு மாநிலத் தேர்தல் முடிவுகளை வைத்து பொய்யாக பைடன் அதிபராவதாக எதிர்வு கூறப்படுவதாக டிரம்பின் தேர்தல் குழு கூறுகிறது.
ஜோர்ஜா மாநிலத்தில் பைடன் முன்னிலையில் இருந்தாலும், இரு வேட்பாளர்களுக்கும் இடையிலான வேறுபாடு மிகவும் சன்னமானதாக இருப்பதால் அங்கு மறு வாக்கு எண்ணிக்கை நடக்கும். ஆனால், இதே போல விஸ்கான்சினிலும் மறு வாக்கு எண்ணிக்கை வேண்டும் என்கிறார் டிரம்ப்.
ஆதாரம் ஏதும் இல்லாமலேயே, தேர்தல் மோசடி நடந்துள்ளதாக குற்றம்சாட்டும் டிரம்ப், இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
சட்ட நடவடிக்கை என்றால் முதலில் மாநில நீதிபதிகள் முன்னிலையில் மறு எண்ணிக்கை கோரிக்கைகள் செல்லவேண்டும். அவர்கள் அது குறித்து முடிவு செய்த பிறகு, அதை உச்சநீதிமன்றத்தில் எதிர்த்து முறையீடு செய்ய முடியும்.
இதற்கிடையே இன்னும் பல மாநிலங்களில் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இந்த எண்ணிக்கையின் முடிவுகள், சான்றிதழ் வழங்கப்படும் வரையில் அதிகாரபூர்வமானவை அல்ல. இப்படி அதிகாரபூர்வ முடிவுகள் வருவதற்கு ஒவ்வொரு மாநிலத்திலும் சில வாரங்கள் வரை ஆகும்.
எப்படி அதிபர் தேர்வு நடக்கும்?
அமெரிக்காவில் மக்கள் அனைவரும் அதிபர் வேட்பாளருக்கே நேரடியாக வாக்களிக்கிறார்கள். ஆனால், நாடு முழுவதும் அளிக்கப்படும் மொத்த வாக்குகளின் அடிப்படையில் அதிபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. அமெரிக்காவில் உள்ள மாநிலங்கள் ஒவ்வொன்றுக்கும் அதன் மக்கள் தொகைக்கு ஏற்ப தேர்தல் சபை உறுப்பினர்கள் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டிருக்கும்.
ஒரு மாநிலத்தில் ஒரு அதிபர் வேட்பாளர் அதிக வாக்குகள் பெற்றால் அந்த மாநிலத்துக்குரிய தேர்தல் சபை உறுப்பினர் வாக்குகள் முழுவதும் அவருக்கு சென்றுவிடும்.
இப்படி தேர்வு செய்யப்படும் 538 தேர்தல் சபை உறுப்பினர்கள் அனைவரும் அவரவர் மாநிலத் தலைமையகத்தில் டிசம்பர் 14ம் தேதி கூடி யார் அதிபர் ஆகவேண்டும் என்று வாக்களிப்பார்கள். எந்த கட்சிக்கு அதிக தேர்தல் சபை வாக்குகள் உள்ளனவோ அந்தக் கட்சியின் அதிபர் வேட்பாளர் இதன் மூலம் அதிபர் ஆவார்.
வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டு, அதிகாரபூர்வ முடிவுகள் இந்த டிசம்பர் 14ம் தேதிக்கு முன்னதாக வழங்கப்படவேண்டும்.
ஜனவரி 20ம் தேதி புதிய அதிபர் பதவியேற்கவேண்டும். அதற்கு முன்னதாக அவர்களுக்கு அமைச்சர்களை நியமித்துக்கொள்ளவும் திட்டங்களைத் தீட்டிக்கொள்ளவும் அவகாசம் வழங்கப்படும்.
பொறுப்புகளை புதிய அதிபரிடம் ஒப்படைக்கும் நிகழ்வு பதவியேற்பு விழாவில் இடம் பெறும். இந்த நிகழ்வு வாஷிங்டன் டி.சி.யில் உள்ள கேபிடல் பில்டிங்கின் படிகளில் நடக்கும்.
இதற்குப் பிறகு பதவியேற்ற அதிபர் நேராக வெள்ளை மாளிகைக்கு செல்வார்.
மூன்றாவது முயற்சியில் வெற்றி
இதற்கு முன்பாக இரண்டு முறை அதிபர் பதவிக்கு முயன்றிருக்கிறார் பைடன்.
1988ம் ஆண்டு பிரிட்டன் தொழிலாளர் கட்சித் தலைவர் நெயில் கின்னாக்கின் பேச்சை காப்பியடித்து பேசியதாக அவரே ஒப்புக்கொண்டு அதிபர் பதவிக்கான போட்டியில் இருந்து விலகினார்.
2008ல் ஜனநாயக கட்சியின் சார்பில் வேட்பாளர் ஆவதற்கு முயர்சி செய்தார். பிறகு அவரே அந்தப் போட்டியில் இருந்து விலகி ஒபாமாவின் துணை அதிபர் வேட்பாளராக நியமிக்கப்படுவதை ஏற்றுக்கொண்டார்.
8 ஆண்டு காலம் ஒபாமாவோடு துணை அதிபராக இருந்தது ஒபாமா ஆட்சியின் பெருமைகளில், அதன் மரபில் உரிமை கோர பைடனுக்கு உதவியாக இருந்தது.
தமது சொந்த மாநிலமான டெலாவேரில் இருந்து 1972ல் செனட்டராக தேர்ந்தெடுக்கப்பட்ட பைடன், மொத்தம் ஆறு முறை செனட்டராக தேர்வு செய்யப்பட்டார்.
நீண்ட தண்டனைக் காலத்தையும், பலரை ஒன்றாக சிறையில் அடைப்பதையும் ஊக்குவித்ததாக இடதுசாரிகளால் குற்றம்சாட்டப்படும் 1994ம் ஆண்டின் ஆன்டி கிரைம் மசோதாவை தீவிரமாக ஆதரித்தவர் பைடன்.
ஜோ பைடனின் வாழ்வு தனி மனித சோகங்கள் நிரம்பியது என்பது பல அமெரிக்கர்களுக்குத் தெரியும்.
1972ல் நடந்த ஒரு கார் விபத்தில் அவர் தமது முதல் மனைவி நெய்லியா மற்றும் பெண் குழந்தை நவோமி ஆகியோரை இழந்தார். இந்த விபத்தில் உயிர் பிழைத்த தமது இளம் மகன்கள் பியூ மற்றும் ஹன்டர் சிகிச்சை பெற்றுவந்த மருத்துவமனை அறையில் இருந்து அவர் தமது முதல் செனட்டர் பதவிக்காலத்துக்கான பதவியேற்பு உறுதிமொழியை எடுத்துக்கொண்டார்.
2015ல் அவரது மகன் பியூ மூளை புற்று நோயால் தமது 46வது வயதில் இறந்தார். 2016ல் அதிபர் பதவிக்கான போட்டியில் ஈடுபடாததற்கு இது ஒரு காரணம் என்று பைடன் கூறியுள்ளார்.