உலகில் இறுதியாக உயிர்வாழ்ந்த வெள்ளை நிற ஆண் காண்டாமிருகம் கென்யாவில் இறந்துள்ளது.
காண்டா மிருகங்கள் பொதுவாக கறுப்பு நிறமாக காணப்படும். ஆனால், வெள்ளை நிற காண்டா மிருகங்களும் உள்ளன.இந்த வெள்ளையின காண்டா மிருகங்கள் வேட்டையாடுபவர்களால் படிப்படியாக அழிந்து வந்தன.
இறுதியாக கென்யாவில் 3 வெள்ளை காண்டாமிருகங்கள் எஞ்சியிருந்தன. உலகில் எஞ்சியிருந்த கடைசி 3 காண்டா மிருகங்கள் இவைதான். இவற்றில் ஒன்று ஆண் ஏனையவை இரண்டும் பெண் காண்டாமிருகங்கள்.
உலகின் கடைசி ஆண் காண்டாமிருகத்துக்கு “சூடான்” என பெயரிடப்பட்டிருந்தது. சூடானில் பிறந்த இந்த காண்டாமிருகம் செக் குடியரசிலுள்ள மிருகக் காட்சிசாலையொன்றில் இருந்தது.
பின்னர் 2009 ஆம் ஆண்டு கென்யாவுக்கு இது அனுப்பப்பட்டது. 45 வயதான விலங்கு இது.
கென்யாவின் ஒல் பேஜேட்டா சரணாலயத்தில் வசித்த இந்த 3 வெள்ளை காண்டாமிருகங்களுக்கும் 24 மணித்தியாலங்களும் ஆயுத பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
அண்மைக்காலமாக உடல்நலக் குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த சூடான் எனும் ஆண் காண்டாமிருகம் இறந்துவிட்டதாக கென்ய அதிகாரிகள் நேற்று செவ்வாய்க்கிழமை அறிவித்தனர்.
இக்காண்டாமிருகத்தின் துணைகளாக விளங்கிய 27 வயதான நாஜின் மற்றும் 17 வயதான ஃபட்டு எனும் இரு பெண் காண்டாமிருகங்களே தற்போது உலகில் எஞ்சியுள்ள கடைசி இரு வெள்ளை காண்டாமிருகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.