இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் செல்லிடத் தொலைபேசியொன்றை சார்ஜ் செய்து கொண்டிருக்கும்போதே அதன் மூலம் உரையாடிக் கொண்டிருந்த 18 வயதான யுவதி ஒருவர் அத்தொலைபேசி வெடித்ததால் உயிரிழந்துள்ளார்.
ஜஹர்சுகுடா மாவட்டத்தின் கீரியாகனி கிராமத்தை சேர்ந்த உமா ஒரம் எனும் யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 3 தினங்களுக்கு முன் இச்சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக உமா ஒரமின் சகோதரர் கூறுகையில், உமா ஒரம், உறவினர் ஒருவருடன் செல்போனில் உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது அதிக சத்தத்துடன் அந்த ஃபோன் வெடித்துச் சிதறியது. இதனால், உமா ஒரம் சுயநினைவிழந்து வீழ்ந்தார். அவரின் நெஞ்சு, கை மற்றும் கால் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. உமா ஒரம், அருகில் உள்ள மருத்துவமனைக்கு சுயநினைவின்றி கொண்டு செல்லப்பட்டபோதிலும், உமா உயிரிழந்து விட்டதாக மருத்துவர் கூறினார்” எனத் தெரிவித்துள்ளார்.
நோக்கியா 5233 (Nokia 5233) ரக தொலைபேசியொன்றே இவ்வாறு வெடித் ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சுமார் 10 வருடங்களுக்கு முன்னர் தயாரிக்கப்பட்ட தொலைபேசியாகும்.
2016 ஆம் ஆண்டின்பின் மீண்டும் சந்தைக்கு வந்த நோக்கியா தொலைபேசிகளுக்கு எச்.எம்.டி. குளோபல் (HMD Global) நிறுவனமே பொறுப்பாக உள்ளது.
இந்நிலையில் ஒரு தசாப்த காலத்துக்கு முன்னர் தயாரிக்கப்பட்ட மேற்படி நோக்கியா 5233 ரக தொலைபேசியானது எச்.எம்.டி. குளோபல் நிறுவனத்தால் தயாரிக்கப்படவோ விற்கப்படவோ இல்லை எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.