லண்டனில் ஆசிய நாட்டைச்சேர்ந்த இளம் தாயும் பிள்ளையும் வீட்டிலிருந்து சடலங்களாக மீட்கப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு லண்டனிலுள்ள, Hounslow என்ற பகுதியில் அமைந்திருக்கும் புதிய அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் ஒரு இளம்பெண்ணும் ஒரு குழந்தையும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இவர்களது சடலங்களை திங்களன்று மாலை 4 மணிக்கு பொலிஸார் மீட்டுள்ளனர்.இதில் உயிரிழந்த இளம் பெண்ணின் பெயர் Shiwangi Bagoan (25) என்றும், அந்த குழந்தை அவரது மகள் என்றும், அந்த சிறுமியின் பெயர் Ziana Bagoan (2) என்றும் தெரியவந்துள்ளது.
இதில் Shiwangi, தன் மகளைக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டதாக கருதப்படுகிறது. Shiwangi என்.ஹெச்.எஸ் மருத்துவமனை ஒன்றில் மயக்க மருந்து நிபுணர் ஒருவரின் உதவியாளராக பணியாற்றிவந்துள்ளார்.
இந்நிலையில் Shiwangi, தன் தாய் மற்றும் தன் மகளுடன் வாழ்ந்துவந்ததாகவும், அவருக்கு கணவர் இருப்பதாக தங்களுக்கு தெரியவில்லை என்றும், அவர்கள் ஆசிய நாட்டை சேர்ந்தவர்களாக இருக்கலாம் எனவும் அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பெருநகர காவல்துறை ஒரு அறிக்கையில் கூறியதாவது,
பெண்ணும் சிறுமியும் ஒருவருக்கொருவர் தொடர்புடையவர்கள்.அடுத்த உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது மற்றும் சிறப்பு அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டு வருகின்றது.மெட் ஸ்பெஷலிஸ்ட் க்ரைம் கமாண்ட் (ஹோமிசைட்) இன் துப்பறியும் நபர்கள் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது.
விசாரணை இன்னும் ஆரம்ப கட்டத்தில் இருக்கும்போது, இந்த சம்பவத்தில் வேறு யாரும் ஈடுபட்டதாக அதிகாரிகள் தற்போது நம்பவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.