எவன் என்னுடைய திருவடிகளை சரணடைகின்றானோ அவனுடைய அத்தனை எண்ணங்களையும் ஈடேற்றுவேன். என்னை எந்த உருவத்தில் பக்தன் பார்க்க விரும்புகிறானோ அதே உருவத்தில் அவனுக்குக் காட்சி தருவேன்.
எவன் என்னை அடைக்கலமாக அடைகின்றானோ அவன் பாரத்தை நான் சுமக்கின்றேன். எவன் தன் உடல், மனம், தனம், செய்கைகள் என அனைத்தையும் எனக்கே அர்ப்பணித்து, என்னை தியானம் செய்கின்றானோ,
எவன் தன் துன்பங்களை என்னிடம் ஒப்புவிக்கின்றானோ, எவன் சாயி நாமத்தை தினமும் ஜெபிக்கின்றானோ, அவன் பேத, பாவங்களில் இருந்து விடுபட்டு என்னையே அடைகின்றான்.
அவன் வேறு நான் வேறு அல்லாமல் அவனை உயர்த்துவேன். கலங்காதே! நீ என்னை நோக்கினால் நானும் உன்னை நோக்குவேன்.
இந்த ஷீரடி மண்ணை எவன் ஒருவன் பக்தியுடன் மிதிக்கின்றானோ அவனது பாவங்கள் அனைத்தும் அவனை விட்டு நீங்கி விடும். கலியுகத்தில் கேட்டவர்க்கு கேட்ட வரத்தை உடனே அளிக்கும் வள்ளலாகத் திகழும் ஷீரடி பாபாவை ஒரு முறை நினைத்தாலே போதும், ஒன்பது தலைமுறையில் செய்த பாவங்கள் தீரும்.
ஷீரடி நோக்கி ஓரடி வைத்தாலே உங்கள் உள்ளத்தில் உள்ள துயரங்கள் யாவும் தூசியாகப் பறக்கும்.
கால் மேல் கால் போட்டு அமர்ந்த நிலையில் காட்சிதரும் பாபாவின் உருவ அமைப்பு மிகவும் ஆற்றல் வாய்ந்ததாக அவரது பக்தர்களால் பூஜிக்கப்படுகிறது. அவர் தமது வலது காலை, இடது முழங்கால் மீது போட்டு தனது இடது கையினை வலது கால் பாதத்தின் மீது படரவிட்டுள்ளார்.
பாபாவின் இடது கை ஆள் காட்டி விரலுக்கும், நடு விரலுக்கும் நடுவே உள்ள வலது கால் பெருவிரலை இரண்டு மரக்கிளைக்கு நடுவே சூரியனைப் பார்ப்பது போல தரிசித்து பாபாவின் ஒளியைப் பெறலாம்.
மேலும் பாபாவின் பாதங்களை நமது கண்ணீரால் கழுவுவதாக மனதளவில் நினைத்தால் இதயம் தூய்மை அடையும் என்றும், அன்பை சந்தனமாக பூசச் சொல்லியும், நமது நம்பிக்கையை பாபாவின் மேலாடையாகவும் கருதச் சொல்கிறார்.
நமது சிரசை பாபாவின் பாதத்தில் வைத்து வணங்கிய பின்னர், நமது பக்தியை சாமரமாகக் கொண்டு வீசி, பாபாவின் வெப்பத்தைத் தணிக்க வேண்டும். அதுவே சிறந்த பாபா வழிபாடு