பொதுவாக பிரசவத்துக்குப் பிறகு உடல் சோர்வு, மனச்சோர்வு, குழந்தையை கவனித்துக்கொள்ளும் கூடுதல் பொறுப்புகளால் ஏற்படும் மன அழுத்தத்தால் தாயின் உடலில் அதிகரிக்கும் ஸ்ட்ரெஸ் ஹார்மோன்களாலும் உடல் எடை அதிகரிக்கிறது.
மேலும், பாலூட்டுவதால் தாய்மார்கள் இயல்பை விட அதிகளவு உணவு உட்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இதனாலும், முழு நேரம் ஓய்வில் இருப்பதாலும் உடல் எடை அதிகரிக்கிறது.
பல சமயம் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திய பிறகும் அதிக அளவு கலோரிகளை தொடர்ந்து உட்கொள்ளுவதாலும் அதிக உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை முறையை பின்பற்றுவதாலும் உடல் எடை அதிகரிப்பு தொடர்கிறது.
இதேபோல் பிரசவத்துக்குப் பிறகு தொப்பை அதிகரிப்பதாக ஒரு கருத்து பரவலாக இருக்கிறது. ஆனால், உடல் எடை முழுவதுமே அதிகரிக்கிறது என்பதே உண்மை. இப்போது பரவலாக கர்ப்ப காலத்தின்போது உடற்பயிற்சிகள், யோகா ஆகியவை செய்யப்படுகின்றன.
தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திய பிறகு தாங்கள் உட்கொள்ளும் கலோரிகளின் அளவுகளை மேலும் குறைத்துக் கொண்டு உடற்பயிற்சி செய்யும் போது உடலின் எடை வேகமாக குறைகிறது.
மேலும் உடலில் உள்ள கலோரிகளை குறைக்க ஏரோபிக் பயிற்சிகள் எனப்படும் ஜாகிங், ரன்னிங், வாக்கிங், ஸ்விம்மிங், டான்ஸிங் ஆகியவற்றைச் செய்யலாம்.
பிரசவத்துக்குப் பிறகு அதிகரிக்கும் எடையானது குறையாமல் இருப்பதாலும், அதிக அளவு உடல் உழைப்பு இல்லாததாலும் பிற்காலத்தில் சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு, ரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகரிப்பது, சுவாசக் கோளாறுகள், மூட்டு தேய்மானம், பித்தப்பையில் கற்கள், நெஞ்சுவலி, பக்கவாதம் உள்ளிட்ட பல வகையான உடல் உபாதைகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
நாம் உட்கொள்ளும் உணவுகளே 80% நமது உடல் எடையை தீர்மானிக்கின்றன. எனவே, உடல் எடையைக் குறைக்க முற்படும்போது முதலில் என்ன உட்கொள்கிறோம், எவ்வளவு உட்கொள்கிறோம் என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.