நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை..!

இலங்கையில் கொவிட்19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 39 ஆயிரத்தை கடந்துள்ளது.

நாட்டில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 592 பேருக்கு கொவிட்19 தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து இந்த எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது.

இதன்படி, நாட்டில் இதுவரை கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 39 ஆயிரத்து 231 ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டவர்களில் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடைய 470 பேரும், சிறைச்சாலைகளுடன் தொடர்புடைய 18 பேரும் அடங்குவதாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜென்ரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி, மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலை, பேலியகொடை மீன் சந்தை மற்றும் சிறைச்சாலைகள் ஆகிய கொத்தணிகளுடன் தொடர்புடைய கொவிட் 19 தொற்றுறுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 35 ஆயிரத்து 548 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன் நேற்றைய தினம் நாடு திரும்பிய நான்கு பேருக்கு கொவிட்19 தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அவர்களில் ஐக்கிய இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய மூன்று பேரும், ஈரானில் இருந்து இலங்கை வந்த ஒருவரும் அடங்குகின்றனர்.

8 ஆயிரத்து 478 பேர் நாடளாவிய ரீதியில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேநேரம், நேற்றைய தினம் 686 கொவிட் 19 நோயாளர்கள் குணமடைந்தனர்.

இதன்படி, நாட்டில் இதுவரையில் 30 ஆயிரத்து 568 நோயாளர்கள் சிகிச்சைகளின் பின்னர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இதேவேளை, நாட்டில் மேலும் ஒரு கொவிட்19 மரணம் பதிவாகியுள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொவிட் 19 தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 185 ஆக உயர்வடைந்துள்ளது.

அகலவத்தை பகுதியை சேர்ந்த 60 வயதான ஆண் ஒருவர் கடந்த 20 ஆம் திகதி பிம்புர ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தார்.

கொவிட் 19 தொற்றால் குருதி விசமானமையே அவரது மரணத்திற்கான காரணம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதேவேளை, களுத்துறை தெற்கு காவற்துறை நிலையத்தின் 4 அதிகாரிகளுக்கு கொவிட் தொற்று ஏறபட்டுள்ளது.

இதனை அடுத்து அந்த நிலையத்தின் 19 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் 68 பேருக்கு என்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறுவோருக்கு 11 இடங்களில் ரெபிட் என்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

இதன்படி பென்தொட்ட பாலத்துக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட என்டிஜன் பரிசோதனையில் பாடசாலை மாணவர் ஒருவருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

குறித்த மாணவரின் தந்தை களுத்துறை தெற்கு காவற்துறை நிலையத்தில் பணியாற்றுகின்ற நிலையில், குறித்த நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட என்டிஜென் பரிசோதனையில் மேலும் 3 பேருக்கு தொற்றுறுதியானது.

இதற்கிடையில் கொழும் மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள முதியோர் இல்லங்களுக்கு வெளிநபர்களை அனுமதிக்க வேண்டாம் என்று மாநகரசபை அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை, நாட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளைத் தவிர்ந்த ஏனைய இடங்களில் திரையரங்குகளை திறப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

திரையரங்குகளின் கொள்ளளவில் 25 சதவீதமான பார்வையாளர்களை மாத்திரம் அனுமதித்து, அவற்றை இயக்க அனுமதிக்கப்பட்டிருப்பதாக, தேசிய திரைப்படக்கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.