கருப்பினத்தவர் என்பதால் கொரோனா சிகிச்சை சரிவர அளிக்கப்படவில்லை ! குற்றம்சாட்டிய அமெரிக்க பெண் மருத்துவர் பலி

அமெரிக்காவில் இண்டியானாபொலிஸ் மாகாணத்தில் கருப்பினத்தவர் என்பதால் தனக்கு கொரோனா சிகிச்சை சரிவர அளிக்கப்படவில்லை என குற்றம்சாட்டிய கருப்பினப் பெண் மருத்துவர் உயிரிழந்தார்.

சூசன் மோர் என்கிற அந்த கருப்பினப் பெண் மருத்துவர் தன் 19 வயது மகன் ஹென்றி உடனும், தன் வயதான பெற்றோர்களுடனும் வாழ்ந்து வந்தார்.

கடந்த நவம்பர் 29-ம் தேதி சூசனுக்கு கொரோனா தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சுவாசிக்க முடியாமல், ரத்த வாந்தி எடுத்த படி, தீவிர காய்ச்சலுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்தியானா யுனிவர்சிட்டி ஹாஸ்பிடல் நார்த் என்ற மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை, வேறு ஒரு உள்ளூர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இந்நிலையில் இவர் இந்த மருத்துவமனையில் தான் ஒரு கருப்பினப் பெண் என்பதால் தனக்கு முறையாக மருத்துவ சிகிச்சை வழங்கப்படவில்லை என கருதி இவர் சில வாரங்களுக்கு முன்பு அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவரைக் குற்றம்சாட்டினார்.

சூசன் கடந்த டிசம்பர் 4-ம் தேதி, தன் வலி குறித்தும், தன் வலியை மருத்துவர் எப்படி பெரிதாகப் பொருட்படுத்தவில்லை என்பதையும் ஃபேஸ்புக்கில் ஒரு காணொளி மூலம் கூறியிருந்தார்.

அதில் சூசன் “ தனக்கு சிகிச்சையளித்தது ஒரு வெள்ளை இன மருத்துவர், அவர் என் நுரையீரல் எப்படி செயல்படுகிறது என்று பார்க்கவில்லை , என்னைத் தொடவே இல்லை. என் உடலை பரிசோதிக்கவில்லை. நான் எப்படி உணர்கிறேன் என உங்களால் கூற முடியாது என அந்த மருத்துவரிடம் கூறினேன்” தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி தனக்குத் தேவையான சிகிச்சைகளைப் பெற போராட வேண்டி இருந்தது எனக் கூறினார் சூசன்.

“நான் வலியில் துடித்துக் கொண்டிருந்தேன். நான் ஏதோ போதை பொருளுக்கு அடிமையானவள் போல, எனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் என்னை உணர வைத்தார். நான் ஒரு மருத்துவர் என்பது அவருக்குத் தெரியும். நான் போதைப் பொருட்களைப் பயன்படுத்தமாட்டேன்.

மேலும் இப்படித் தான் கருப்பின மக்கள் கொல்லப்படுகிறார்கள்” என தன் ஃபேஸ்புக் காணொளியில் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.