மறைந்த பாப் நட்சத்திரம் மைக்கேல் ஜாக்சனின் சொகுசு பண்ணை வீடான ‘நெவர்லேண்ட் ராஞ்ச்’ அவர் இறந்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு சமீபத்தில் விற்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் காலிஃபோர்னியாவில் உள்ள இந்த 2,700 ஏக்கர் (10.9 சதுர கிலோமீட்டர்) பண்ணை வீட்டை பில்லியனர் ரான் பர்கில் என்பவர் வாங்கினார். ரான் பர்கில் மைக்கேல் ஜாக்சனின் கூட்டாளியாகவும் குடும்ப நண்பராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பொது பதிவேட்டின் படி, பல ஆண்டுகளுக்கு முன்பு Sycamore Valley Ranch என பெயர் மாற்றப்பட்ட இந்தப் பண்ணை 22 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டுள்ளது. இந்தப் பண்ணை ஆரம்பத்தில் 100 மில்லியன் டாலராக 2016-ல் பட்டியலிடப்பட்டது, பின்னர் ஒரு வருடம் கழித்து 67 மில்லியன் டாலராக மறுபட்டியலிடப்பட்டது.
இந்த எஸ்டேட்டில் 12,500 சதுர அடி (1161 சதுர மீட்டர்) குடியிருப்பு, 3,700 சதுர அடி நீச்சல்குள வீடு மற்றும் 50 இருக்கைகள் கொண்ட திரைப்பட அரங்கம் மற்றும் நடன ஸ்டுடியோ கொண்ட தனி கட்டிடம் ஆகியவை உள்ளன. பண்ணையில் “டிஸ்னி ஸ்டைல்” ரயில் நிலையம், ஒரு fire house மற்றும் களஞ்சியமும் உள்ளது.
ஜாக்சன் 1988-ஆம் ஆண்டில் 19.5 மில்லியன் டாலருக்கு இந்த வீட்டை வாங்கினார், ஆனால் நிதி சிக்கல்களால் Colony Capital LLCக்கு இதனை வழங்கினார். மீண்டும் அந்த பண்ணை வீட்டுக்கு வந்த அவர், 2005 ஆம் ஆண்டு அங்கு ஒரு சிறுவனை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் அந்த சொத்தை கைவிட்டார்.