நாட்டில் மேலும் ஒரு கொவிட்19 மரணம் நேற்று பதிவானது.
இதற்கமைய, நாட்டில் கொவிட் 19 தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 186 ஆக உயர்வடைந்துள்ளது.
அக்கரைப்பற்று – அட்டாலைச்சேனை பகுதியை சேர்ந்த 54 வயதான ஆண் ஒருவர் அக்கரைப்பற்று ஆதார வைத்திசாலையில் கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர் என இனங்காணப்பட்டதன் பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
பின்னர் அந்த வைத்தியசாலையில் கடந்த 24 ஆம் திகதி அவர் உயிரிழந்தார்.
கொவிட் 19 தொற்றினால் ஏற்பட்ட கடுமையான இதய நோய் நிலையே அவரது மரணத்திற்கான காரணம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது
இதேவேளை, நாட்டில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 551 பேருக்கு கொவிட்19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, நாட்டில் இதுவரை கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 39 ஆயிரத்து 782 ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டவர்களில் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடைய 541 பேரும், சிறைச்சாலைகளுடன் தொடர்புடைய 10 பேரும் அடங்குவதாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜென்ரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்படி, மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலை, பேலியகொடை மீன் சந்தை மற்றும் சிறைச்சாலைகள் ஆகிய கொத்தணிகளுடன் தொடர்புடைய கொவிட் 19 தொற்றுறுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 36 ஆயிரத்து 99 ஆக உயர்வடைந்துள்ளது.
8 ஆயிரத்து 257 பேர் நாடளாவிய ரீதியில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேநேரம், நேற்றைய தினம் 771 கொவிட் 19 நோயாளர்கள் குணமடைந்தனர்.
இதன்படி, நாட்டில் இதுவரையில் 31 ஆயிரத்து 339 நோயாளர்கள் சிகிச்சைகளின் பின்னர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இதேவேளை, திருகோணமலையில் நேற்றைய தினம் 9 பேருக்கு கொவிட்19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மூதூரில் 2 பேருக்கும் திருகோணமலையில் 7 பேருக்குமே இவ்வாறு கொவிட்19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களில் கர்ப்பிணி பெண் ஒருவரும், 8 மாத குழந்தையும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய திருகோணமலையில் இதுவரை கண்டறியப்பட்ட கொவிட்19 நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 113 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை, சிறைச்சாலைகளில் மாத்திரம் இதுவரையில் 3 ஆயிரத்து 611 பேருக்கு கொவிட்19 தொற்றுறுதியானதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அவர்களில், 2 ஆயிரத்து 743 பேர் தற்போது வரை குணமடைந்துள்ளதாகவும் அந்த திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, மொனராகலை – படல்கும்பர – அலுபொத்தகம பகுதியில் இதற்கு முன்னர் அடையாளம் காணப்பட்ட கொவிட்19 நோயாளருடன் முதல் நேரடி தொடர்புடைய நபர்களுக்கு பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் அவர்களில் 5 பேருக்கு புதிதாக கொவிட்19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேநேரம், பிரித்தானியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் கண்டறியப்பட்டுள்ள புதிய தன்மைகளை கொண்ட கொவிட்19 வைரஸானது மத்திய கிழக்கு நாடுகளில் இருத்து நாட்டிற்கு வருவோர் மூலம் இலங்கைக்குள் பரவும் அபாயம் இருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
புதிய கொவிட்19 வைரஸ் தற்போது சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளதால் அது இலங்கைக்கு பரவும் அதிக வாய்ப்புள்ளதாகவும் அந்த சங்கத்தின் வைத்தியர் ஹரித்த அலுத்கே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, புதிய கொவிட்19 வைரஸின் தன்மைகளை கண்டறிவதற்கு அவசியமான இயந்திரம் சுகாதார அமைச்சின் இரசாயன ஆய்வு கூடத்தில் இல்லை என சுகாதார சேவையாளர்களின் அறிஞர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
புதிய வைரஸானது நாட்டில் பரவக்கூடிய அபாயம் உள்ள போதிலும் அதனை கண்டறிவதற்கான ஏற்பாடுகள் இன்னும் செய்யப்படவில்லை.
சுகாதார அமைச்சின் ஆய்வுகூடத்தில் அதனை கண்டறிவதற்கான இயந்திரம் விரைவில் நிறுவப்பட வேண்டிய தேவை உள்ளதாகவும் அந்த சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், புதிய தன்மைகளை கொண்ட கொரோனா வைரஸ் தொற்றினை கண்டறிவதற்கான சகல வசதிகளும் இலங்கையில் இருப்பதாக சிறிஜயவர்தனபுர பல்கலைக்கழக உயிரியல் விஞ்ஞான நிறுவனத்தின் பணிப்பாளர் பேராசிரியர் சந்திம ஜீவேந்திர தெரிவித்துள்ளார்.