ஆபத்தான பாம்புகளைப் பிடித்துப் பிரபலமான மலேஷிய தீயணைப்பு வீரர் ஒருவர், நாக பாம்பு கடித்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
33 வயதான அபு ஸரின் ஹுஸைன் என்ற இத்தீயணைப்பு வீரர், பாம்புகளுடன் நெருங்கிப் பழகியவர். பாம்புகளை தான் முத்தமிடும் பல புகைப்படங்கள், வீடியோக்களை அவர் வெளியிட்டிருந்தார். இப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவின.
அண்மையில் இவர் மலேஷியாவின் மத்திய பிராந்திய மாநிலமான பஹாங்கில் நல்ல பாம்பொன்று அபு ஸரின் ஹுஸைனை கடித்தது. இதையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அபு ஸரின் ஹுஸைன், 4 தினங்களின் பின் கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
கடமையில் இல்லாத வேளையில் தனது மனைவியுடன் அபு ஸரின் ஹுஸைன் இருந்தபோது பாம்பொன்றை பிடிக்க வருமாறு அவருக்கு அவசர அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், அதன்பின் மேற்படி நாக பாம்பை பிடிக்க முயற்சித்தபோது அது கடித்ததாகவும் கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் கிரிதின் த்ரஹ்மன் தெரிவித்துள்ளார்.