கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், பிரித்தானியாவை சேர்ந்த விஞ்ஞானிகள் செயற்கை எதிர்ப்பு சக்தியை கண்டறிந்துள்ளனர்.
உலகையே ஆட்டிப் படைத்து வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த, பல்வேறு நாடுகளில் இன்றளவும் தடுப்பூசி கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது.
தற்போது, உலக அளவில் பைசர்- பயான்டெக் தடுப்பு மருந்து பிரபலமடைந்து வருகிறது.
இந்நிலையில் பிரித்தானியாவில் எதிர்ப்பு சக்தி மருந்து சிகிச்சை குறித்து விஞ்ஞானிகளால் ஓர் ஆராய்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
யுனிவர்சிட்டி காலேஜ் லண்டன் மருத்துவமனை ‘ஏஇசட்டி-7442’ என்கிற புதிய வகை எதிர்ப்பு சக்தி ஒன்றை கண்டறிந்துள்ளது.
இது அஸ்ட்ராசெனேகா தடுப்பு மருந்து கண்டுபிடித்த குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொரோனா தாக்கியவர்களுக்கு இந்த நோய் எதிர்ப்பு சக்தி மூலமாக அதிக ஆற்றல் கிடைக்கும் என நம்பப்படுகிறது.
வைரஸ் ஆய்வு நிபுணர் டாக்டர் கேத்தரின் 10 கொரோனா வைரஸ் நோயாளிகள் கொண்டு இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
தடுப்பு மருந்து செலுத்தும் பணி தாமதமாகும் பட்சத்தில் இந்த எதிர்ப்பு சக்தியை ஊசிமூலம் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு செலுத்துவதால் வைரஸ் தாக்கத்திலிருந்து அவர்கள் தப்பிக்க முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
வயது மூப்பு காரணமாக கொரோனா வைரஸ் தாக்கத்தில் அவதிப்படுவோருக்கு இந்த எதிர்ப்பு சக்தி ஊசி மிகவும் பயனுள்ளதாக அமையும் என்றும் சிலருக்கு வைரஸ் தடுப்பு மருந்து ஒவ்வாமை ஏற்படலாம் என்பதால் அவர்களுக்கு எதிர்ப்பு சக்தியை கூட்ட இந்த ஊசியை பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளார்.
மேலும், புரதத்தால் ஆன மாலிக்யூல்கள் கொண்ட எதிர்ப்பு சக்தி உடல் உயிரிகளால் உற்பத்தி செய்யப்படுகிறது. இதே எதிர்ப்புசக்தி ஆராய்ச்சிக்கூடத்தில் செயற்கை முறையில் தயாரிக்கப்படுகிறது. இதன் பெயர் மோனோகிளோனல் ஆன்ட்டி பாடீஸ்.
தடுப்பு மருந்துகள் உடல் எதிர்ப்புசக்தியை அதிகரிக்க ஊக்குவிக்கின்றன. ஆனால் செயற்கை எதிர்ப்பு சக்தி, கொரோனா வைரஸ் நோயாளியின் உடலில் செலுத்தப்படுவதால் இயற்கை எதிர்ப்பு சக்தியுடன் இணைந்து உடலில் உள்ள கொரோனா வைரஸ் உடன் மோதத் தயாராகின்றன.
இயற்கை மற்றும் செயற்கை எதிர்ப்பு சக்திகள் ஒன்று சேர்வதால் நுரையீரலில் பல்கிப்பெருகும் வைரஸை எளிதில் இவை அழித்து விடுகின்றன.
குறிப்பாக எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள வயோதிகர்களுக்கு இந்த செயற்கை எதிர்ப்பு சக்தி ஊசிகள் செலுத்துவதால் அதிக பலன் கிடைக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.