புதிதாக உருவாகும் கொரோனா துணைக் கொத்தணிகள்! பொது மக்களுக்கு எச்சரிக்கை

தற்போதைய சூழ்நிலையில் பண்டிகை காலத்தில் மேல் மாகாணத்திலிருந்து வெளியேறியவர்கள் மத்தியில் இருந்து நோயாளிகள் கண்டறியப்படுவதாகவும், இதன் காரணமாக வேறு சில மாகாணங்களில் துணைக் கொரோனா பரவல்கள்; உருவாகின்றன என்று பொது சுகாதார அதிகாரிகள் சம்மேளனம் எச்சரித்துள்ளது.

மத்திய மாகாணம், கிழக்கு மாகாணம் மற்றும் வடமேற்கு மாகாணத்தில் இருந்து நோயாளிகள் கண்டறியப்படுவதாக தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாக சம்மேளனத்தின் செயலாளர் மகேஸ் பாலசூரிய தெரிவித்துள்ளார்.

இவர்கள் கொழும்பு மாவட்டத்தில் இருந்து விடுமுறை காலத்தில் பயணம் செய்தவர்கள் மத்தியில் இருந்தே கண்டறியப்படுகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனை தடுப்பதற்காகவே மேற்கு மாகாணத்திலிருந்து ஏனைய மாகாணங்களுக்கான போக்குவரத்துக்களுக்கு தடையை விதிக்குமாறு ஏற்கனவே தாம் அதிகாரிகளிடம் கோரியிருந்ததாக பாலசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் அடுத்து வரும் வாரங்களில் அல்லது அந்த மாவட்டங்களில் இருந்து ஏனைய மாவடங்களில் கொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் அச்சுறுத்தல் உள்ளது என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எனவே என்டிஜன் பரிசோதனைகளுக்கு பதிலாக பீசீஆர் பரிசோதனைகளை அதிகரிப்பதற்கு மாவட்டங்களில் உள்ள அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் பாலசூரிய கோரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து போன்ற பிற நாடுகள் அனைத்தும் பி.சி.ஆர் சோதனைகள் மூலம் நோயாளிகளைக் கண்டறிகின்றன. மேல் மாகாணத்தில் நோயாளிகளின் எண்ணிக்கையில் எந்த வீழ்ச்சியும் ஏற்படவில்லை.

இதேவேளை மூன்றாவது அலைகளைத் தடுப்பதற்காக, பாதிக்கப்படக்கூடிய மற்றும் அதிக மக்கள் தொகையைக் கொண்ட பிரதேசங்களில் பீசீஆர் பரிசோதனைகள் தீவிரமாக தொடரவேண்டும் என்றும் பாலசூரிய தெரிவித்தார்.