தற்போதைய சூழ்நிலையில் வவுனியாவில் அரச திணைக்களங்களை சேர்ந்த பல்வேறு ஊழியர்கள் மேல் மாகணத்திற்கு சென்று வருகின்றனர். அவர்கள் தொடர்பில் கவனமெடுக்குமாறு வவுனியா பிரதி சுகாதார வைத்திய அதிகாரி துஸ்யந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொவிட்-19 தாக்கம் மற்றும் அது தொடர்பில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான விசேட கூட்டம் ஒன்று வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்று (29) நடைபெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த அவர்,
வவுனியாவில் அமைந்துள்ள பல்வேறு அரச திணைக்களங்களை சேர்ந்த அலுவலர்கள் பலர் மேல்மாகாணத்திற்கு சென்று வருகின்றார்கள். தொடர்ந்து இச் செயற்பாடு இடம்பெற்று வருகின்றது.
அதனை நாம் ஒவ்வொருவராக கவனிப்பது மிகவும் கடினம். எனவே திணைக்களங்களின் தலைவர்கள் இந்த விடயம் தொடர்பாக கவனத்தில் எடுக்குமாறும் அவர்களிற்கான விடுமுறைகளை குறைத்து கொள்ளுமாறும் கேட்டு கொள்கின்றேன்.
அவ்வாறு சென்று வருபவர்கள் தனிமைப்படுத்தல் பிரதேசத்திற்கு செல்லவில்லை என்று சுகாதார பிரிவினரினால் சிபார்சு செய்யப்பட்ட கடிதம் ஒன்றினை பெற்றுவர வேண்டும் என்ற நடைமுறை ஏற்படுத்தப்பட வேண்டும்.
இதேவேளை வெளிமாகாணங்களில் இருந்து கிராமங்களிற்கு வருபவர்களை தனிமைப்படுத்த வேண்டிய தேவை இருப்பதுடன் அவர்களை இனம்காண வேண்டிய தேவையும் இருக்கிறது. இது தொடர்பாக பொது மக்களே சுகாதார பிரிவினருக்கு அதிகமான தகவல்களை வழங்குகின்றனர். உண்மையில் கிராம சேவகர்களே இந்த விடயத்தை கையாள வேண்டும் என்றார்.