பாம்புகளை உடலின் மீது ஊர்ந்து செல்லவிட்டு உடல் வலியை போக்கும் மசாஜ் செய்யும் முறை எகிப்து நாட்டில் அறிமுகம் செய்துள்ளனர்.
உலகில் பல இடங்களில் மசாஜ் செய்யும் முறைகள் மக்களை கவரும் விதமாக வித்தியசமான முறையில் கடைப்பிடித்து வருகிறார்கள்.
அந்த அளவுக்கு உடல் மசாஜ்களுக்கு எப்போதுமே கிராக்கி உண்டு. மசாஜ் செய்து கொள்வதற்காகவே பலர் தாய்லாந்து பறப்பதும் உண்டு.
மசாஜ் வகையில், ஆயில் மசாஜ், பவுடர் மசாஜ், தாய் மசாஜ், ஸ்வீடிஷ் மசாஜ், ஹாட் ஸ்டோன் மசாஜ் என பல வகையான மசாஜ்கள் செய்யப்படுகின்றன.
ஏற்கனவே, இத்தனை மசாஜ்கள் புழக்கத்தில் இருக்கும் நிலையில், பாம்புகளை கொண்டு திகிலூட்டும் வகையில் எகிப்தில் ஒரு புதிய மசாஜ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
எகிப்தின் கெய்ரோ நகரில் உள்ள மசாஜ் மையத்தில் தான் பாம்புகளை கொண்டு மசாஜ் செய்து வருகின்றனர்.
அங்கு, மசாஜ் செய்ய வருபவர்களை குப்புற படுக்க வைத்து, அவர்கள் முதுகின் மேல் பல வகையான பாம்புகளை ஊர்ந்து செல்ல விடுகின்றனர்.
மேலும், அந்த பாம்புகள் அவர்களின் தலை முதல் கால் வரை ஊர்ந்து செல்கின்றன. இரண்டு டசனுக்கும் அதிகமான பாம்புகளை உடலின் மீது போடுகிறார்கள்.
மலைப்பாம்பு முதல் சாரைப்பாம்பு வரை பலவகையான பாம்புகள் உடலில் ஊருகின்றன. இவை அனைத்துமே விஷத்தன்மையற்றவை. எனவே கடித்தாலும் பயமில்லை.
பார்ப்பதற்கே மிகவும் அச்சமூட்டக் கூடிய இந்த மசாஜை செய்து கொள்ள பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பாம்பு மசாஜ் செய்து கொள்ளும் போது மிகப்பெரிய புத்துணர்ச்சி ஏற்படுகிறது. உடல் வலி எல்லாம் பறந்து போகிறது எனவும் வாடிக்கையாளகள் கூறுகின்றனர்.
சுமார் 20 – 30 நிமிடங்கள் வரை செய்யப்படும் இந்த பாம்பு மசாஜ்க்கு இந்திய மதிப்புபடி சுமார் ரூ.500 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறதாம்.