உத்திரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 19 வயது இளைஞரும், 21 வயது இளம்பெண்ணும் காதலித்து திருமணம் செய்துள்ளனர்.
இதனிடையே, தங்களது மகளை கடத்தி திருமணம் செய்ததாக பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் அடிப்படையில் இளைஞர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார், இளம்பெண்ணின் விருப்பத்துக்கு எதிராக கணவரிடமிருந்து பிரித்து அவரை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
இந்நிலையில், தனது மனைவியை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என இளைஞர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சம்பந்தப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது தனது சுயவிருப்பத்தின் அடிப்படையிலேயே திருமணம் செய்துகொண்டதாக தெரிவித்தார்.
மேலும், அப்பெண்ணின் பள்ளிச் சான்றிதழின் அடிப்படையில் 1999-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பிறந்தவர் என்பது நிரூபிக்கப்பட்டது. இதனால் அப்பெண் தனது கணவருடன் வாழ முழு உரிமை இருக்கிறது என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
இதனைத்தொடர்ந்து, காதல் தம்பதியினர் வீடு சென்று சேரும் வரை போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.