பரிகார பூஜை செய்வதாக ஏற்பாடு செய்த தம்பதியினர்; இறுதியில் மந்திரவாதி செய்த கொடூர செயல்!

திருப்பூர், வெள்ளக்கோயிலில் மந்திரவாதி தாக்கியதில் ஒரு பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தை அடுத்த வெள்ளக்கோயில் மூலனூர் சாலையில் ஆறுமுகம்-ஈஸ்வரி தம்பதியர் வசித்து வந்தனர்.

இவர்களுக்கு உதயகுமார் என ஒரு மகன் உள்ளார். இவர் பல்லடம், செஞ்சேரிமலையில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். உதயகுமாருக்கு திருமணமாகி கடந்த 13 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை.

இதனைத்தொடர்ந்து, குழந்தை வேண்டியும், தொழில் சிறப்பாக நடக்கவும் வெள்ளக்கோயில், திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த மந்திரவாதியும் ஆட்டோ ஓட்டுநருமான சக்திவேலிடம் பரிகார பூஜை செய்ய ஆறுமுகம் ஏற்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து, கடந்த நாளுக்கு முன்னர் அதிகாலை வீட்டில் பரிகாரம் முடிந்து, கடையில் பரிகார பூஜை நடந்துள்ளது.

அப்போது, மந்திரவாதி, ஈஸ்வரி, ஆறுமுகம் இருவரையும் இரும்புக் கம்பி, அரிவாளால் தாக்கிவிட்டு ஈஸ்வரி அணிந்திருந்த 5 சவரன் நகை, ரூ.10 ஆயிரம் பணத்தைப் பறித்துக் கொண்டு தப்பியோடியுள்ளான்.

இதனால், அங்கு கேட்ட சத்தத்தால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், ஷட்டரை திறந்து பார்த்தபோது ஈஸ்வரி உயிரிழந்து கிடந்தார்.

மேலும், உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட ஆறுமுகம் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதனை தொடர்ந்து மோப்ப நாய், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வெள்ளக்கோயில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.