ரிலையன்ஸ் பெட்ரோலியத்தின் பங்குகளில் முறைகேடான வர்த்தகம் செய்ததாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், முகேஷ் அம்பானி மற்றும் இரண்டு நிறுவனங்களுக்கு மொத்தம் ரூ .70 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் பெட்ரோலியம் 2009-ல் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்(RIL) உடன் இணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆனால், 2007 ஆம் ஆண்டு ரிலையன்ஸ் பெட்ரோலியம் நிறுவனத்தில் முறைக்கேடு நடந்ததை கண்டுபிடித்த இந்திய பங்குச்சந்தைகள் ஒழுங்குமறை வாரியமான செபி, இந்த அபராதங்களை விதித்துள்ளது.
இதுதொடர்பாக செபி 95 பக்க அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், நவம்பர் 2007ல், RIL மற்றும் அதனுடன் நெருக்கமாக தொடர்புடைய பல நிறுவனங்கள், ஒரே நேரத்தில் ரிலையன்ஸ் பெட்ரோலியம் நிறுவனத்தில் முறைகேடாக ரொக்கமாகவும் மற்றும் டெரிவேடிவ் பிரிவுகளிலும் வர்த்தகம் செய்து, அதில் இருந்து லாபம் ஈட்டியதாக குறிப்பிட்டுள்ளது.
இதனால், RIL-க்கு ரூ .25 கோடியும், RIL நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான அம்பானிக்கு ரூ .15 கோடியும், நவி மும்பை சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு (SEZ) ரூ .20 கோடியும், மும்பை சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு (SEZ)ரூ .10 கோடியும் செபி அபராதம் விதித்துள்ளது.
அந்த உத்தரவில், வர்த்தகங்களின் அளவு அல்லது விலையில் நடக்கும் எந்தவொரு முறைகேடும், சந்தையில் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை சிதை்துவிடும் என அறிக்கையில் செபி குறிப்பிட்டுள்ளது.