நாட்டில் நேற்று 515 கொரோனா நோயாளர்கள் அடையாளம்

நாட்டில் நேற்றைய தினம் மொத்தமாக 515 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறு புதிதாக அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் 419 பேர் பேலியகொட – மினுவாங்கொடை கொத்தணிப் பரவலுடன் தொடர்புடையவர்கள் ஆவர்.

ஏனைய 83 பேர் சிறைச்சாலை கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என்பதுடன் 13 பேர் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தவர்கள் ஆவர்.

இதனால் இலங்கையில் பதிவான மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையானது 44,371 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு ‍தெரிவித்துள்ளது.

இதேவேளை பேலியகொட – மினுவாங்கொடை கொரோனா கொத்தணிப் பரவலில் சிக்கிய மொத்த கொரோனா நோயாளர்களது எண்ணிக்கை 40,628 ஆக பதிவாகியுள்ளது.

இது இவ்வாறிருக்க நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளான 562 நோயாளர்கள் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர். அதன் காரணமா குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கையும் 36,717 ஆக உயர்வடைந்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலை மற்றும் சிகிச்சை நிலையங்களில் 7,443 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேநேரம் கொரோனா தொற்று சந்தேகத்தின் பேரில் 586 பேர் தொடர்ந்தும் வைத்தியக் கண்காணிப்பில் உள்ளனர்.

இதேவேளை கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் மூன்று நோயாளர்கள் உயிரிழந்திருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்றிரவு உறுதிப்படுத்தினார்.

அதனால் கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கையும் நாட்டில் 211 ஆக உயர்வடைந்துள்ளது.