19 வயதிலேயே மாபெரும் நிறுவனத்தின் முதலாளியான சிங்கப்பூர் இளைஞன்!

செய்யும் தொழிலில் ஆர்வம் இருந்தால், தானாகவே பெயரும் புகழும் சேரும் என்பதற்குச் சான்று 19 வயது ஹர்ஷ் டலால் (Harsh Dalal).

13 வயதில் நண்பர்களுடன் இணைந்து உருவாக்கிய, திரையைப் பதிவுசெய்யும் திறன்பேசிச் செயலி, ஒரு சில வாரங்களில் 5 மில்லியன் பேரால் பதிவிறக்கம் செய்யப்பட்டது.

செயலி பிரபலமடையும் என்பதை எதிர்பார்க்காத அவர்கள், அதில் அதிகப் பணம் ஈட்டும் பொன்னான வாய்ப்பைத் தவறவிட்டனர்.

அந்த அனுபவத்திலிருந்து பாடம் கற்றுக்கொண்ட டலால், Team Labs எனும் சொந்த நிறுவனம் ஒன்றைத் தொடங்கி அதன் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்றுள்ளார்.

Coca-Cola Company, Google, Hilton நிறுவனங்கள் அவரது நிறுவனத்தின் சேவைகளைப் பயன்படுத்தி வருகின்றன.

சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரியில் பயிலும் டலால், படிப்பையும் சமாளித்துக்கொண்டு எட்டு நகரங்களில் பணிபுரியும் 120 ஊழியர்களையும் நிர்வகித்து வருகிறார்.

இந்தியாவிலிருந்து, 6 வயதில் சிங்கப்பூருக்கு வந்த டலால், அடிக்கடி வீடு மாறியதாக CNA Insiderஇடம் தெரிவித்தார்.

ஒவ்வொரு முறை இடம் மாறும்போதும், அந்தப் பேட்டையில் வசித்து வந்த நண்பர்களை இழந்ததாகக் கூறினார் அவர். அதனால், விளையாட்டுத் திடல்களுக்கு பதிலாகத் தமது நேரத்தை, மடிக்கணினியில் செலவிட்டதாகக் கூறினார் அவர்.

11 வயதில், YouTube காணொளிகளைப் பார்த்தே, கணினி நிரலாக்கத்தைக் கற்றுக்கொண்டார் டலால்.

Apple நிறுவனத்தின் iOS கட்டமைப்பில் அதிகம் ஆர்வம் இருந்ததால், அதன் தொடர்பிலான இணைய உரையாடல் தளங்களில் அதிக நேரம் செலவிட்டார். அங்கு அமெரிக்கா, ரஷ்யா, நார்வே, சிங்கப்பூரைச் சேர்ந்த நான்கு இளையர்களைச் சந்தித்தார்.

அவர்களிடையே நட்பு வளர்ந்தது. அதிலிருந்து பிறந்தது, திரையைப் பதிவுசெய்யும் செயலி.

16 வயதில், பன்னாட்டு நிறுவனம் ஒன்றுக்குச் செயலி உருவாக்கும் குத்தகை, டலாலுக்கும் அவரது நண்பர்களுக்கும் கிடைத்தது.

100,000 வெள்ளி மதிப்புமிக்க குத்தகையில் 5 இளையர்களுக்கும் ஆளுக்கு 10,000 வெள்ளி வருமானம் கிடைத்தது. எஞ்சிய தொகை, செயலியை உருவாக்கப் பயன்படுத்தப்பட்டது.

அதனுடன், 3 மின்னிலக்க நாணயங்கள் ஒவ்வொன்றையும் 400 டாலருக்கு வாங்கி முதலீடு செய்து, அதில் ஐந்திலக்க லாபத்தை ஈட்டினார்.

2017இல் மற்ற நிறுவனங்களுக்குச் சேவைகளை உருவாக்குவதற்கு பதிலாகச் சொந்தமாக, Xenon என்ற மென்பொருள் தளத்தைத் தொடங்கினார். தற்போது அதைச் சுமார் 70,000 பேர், பயன்படுத்தி வருகின்றனர்.

இளம் வயது காரணமாக, முதலில் தளத்திற்கான முதலீட்டைத் திரட்டுவதில் சிரமப்பட்டார் இளையர். மனம் தளராமல் முயன்ற அவர், அமெரிக்க நிறுவனம் ஒன்றிடம் முதலீடு பெற்றார்.

தற்போது அனைவரும் வீட்டிலிருந்து வேலை செய்யும் சூழலுக்கு ஏற்ப, புதுவித மென்பொருளைத் தயாரித்து வருகிறார் இளையர்.

நோய்ப்பரவலுக்கு முன் சுமார் 25 மில்லியன் டாலராக மதிப்பிடப்பட்ட டலாலின் நிறுவனம் தற்போதைய சூழலில் இழப்பைச் சந்தித்து வருவதாக CNA Insiderஇடம் தெரிவித்தார்.

அமெரிக்காவில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கான நிவாரண நிதி ஒன்றை, டலால் தொடங்கியிருக்கிறார்.

தற்போதைக்கு நிறுவனத்திடமிருந்து சுமார் 200 வெள்ளியை மட்டுமே சம்பளமாகப் பெறுகிறார் டலால். மற்ற செலவுகளுக்குப் பெற்றோரை நம்பியுள்ளார் அவர்.

பட்டயக் கல்விக்குப் பின், பல்கலைக் கழகப் படிப்பைத் தொடர விரும்பும் டலால், இவ்வாண்டு தேசிய சேவையைத் தொடங்குவார்.